பக்கம்:அவள்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மோனாம்பரி 417

மாலை அந்தியாக மாறிக்கொண்டே வருகிறது.

என்னை வீட்டுக்குக் காவல் வைத்துவிட்டு, எப்பவோ எல்லோரும் கொலுப் பார்க்க, கொலுவுக்கு அழைக்கப் போய்விட்டனர்.

கூடத்தில் உட்கார்ந்தபடி, கொலுவுக்கு எதிரே—எனக்கு அம்மாவின் நினைப்பு வந்துவிட்டது. அம்மா எப்படிப் பாடுவாள்!

இந்நாளில் கொலுவுக்கு யார் பாடுகிறார்கள்? டேப் தான் இருக்கிறதே!

அம்மாவின் குரல் புல்லாங்குழல் போன்றது. ஒரு திகட்டலான இனிமை.

ஒரு பக்கம் வெள்ளிச் சிறகு, மறு பக்கம் பொன் சிறகு கூடிய ஒரு பட்சி பறப்பது போன்ற குரல்.

போச்சு அந்த நாள் எல்லாம். தொண்டையை அடைக்கிறது. மூக்கு உறிஞ்சிற்று. நல்ல வேளை, யாரும் இல்லை. .

"கி—றீ—ச்.' கேட் திறக்கிறது.

அடுத்த சில கணங்களில் வெளியிருளினின்று கூடத்தில் தோன்றினாள் என்றே சொல்ல வேண்டும். வாட்டசாட்டமான உடல் வாகு.

'யாரும் இல்லையா?' என்று கேட்கும் சைகையில் கையை ஆட்டினாள். உருண்டை முகம், மேட்டு நெற்றி.

யாரும் இல்லை என்ற பதிலில், என் மெளன விரதத்தில் கை விரித்தேன்.

சுற்று முற்றும் பார்த்தாள். விளக்கேற்றி வைக்கக் கூட நேரமில்லாமல் போய்விட்டார்கள்—சுண்டல் தண்டலுக்கு, புடவைகளை வியக்க.

அ.-27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/461&oldid=1497426" இலிருந்து மீள்விக்கப்பட்டது