பக்கம்:அவள்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

424 லா. ச. ராமாமிருதம்

ஆனால், அப்பாவின் ஆசி நமக்கு வேணும்' என்றாள், என்கிறாள், 'எங்கள் சமுதாயத்தில் காதலில் விழுவதும், விடுபடுவதும் சர்வசகஜம். உங்களில் அப்படி அல்ல. நான் உன்னைக் கலியாணம் செய்துகொண்டால், உனக்கு மனைவி மட்டும் அல்ல, உங்கள் குடும்பத்துப் பெண் ஆகி விடுகிறேன். எங்களுக்கும் உங்களைப் போலவே எடுத்துக் கொள்ளும் சத்யங் கள் இருக்கின்றன. ஆனால், எங்களுக்குத் தாலியில்லை. உங்கள் ஜாதியில் தாலியைக் கழற்ற முடியாது. கழற்றுவதாய்க் காட்டுவதெல்லாம் சினிமாவுக்குத்தான். உங்களுக்கும் நாட்டின் ஸ்வதந்தரத்துடன், விவாகரத்து சட்டம் வந்திருக்கிறது. 'எல்லா நாடுகளுக்கும் இருப்பதுபோல எங்களுக்கும் என்பதற்குத்தான். Imitative. ஆனால், அது உங்கள் பண்பாட்டில் கிடையாது. எனக்குத் தாலி வேண்டும். அப்பாவின் சம்மதம் இல்லாவிட்டாலும் அப்பாவின் ஆசி வேண்டும்.”

'அதென்ன சம்மதமில்லாமல் ஆசி? ஆசி வேறே, சம்மதம் வேறேயா? கேட்கிறீர்களா? கேட்காவிட்டாலும் சொல்கிறேன். சம்மதம் என்பது நீங்கள்—ராமநாராயண் சர்மா என்கிற தனிப்பட்ட மனிதனின் சொந்த எண்ணம், இஷ்டம். ஆசி என்றால், அது 'ஸர்வே ஜனோ ஸுகினோ பவந்து'வில் சேர்ந்தது அப்பா! ஆசீர்வதிக்கையில் நீங்கள் மட்டும் இல்லை. நம் வழி முன்னோர்கள், பரம்பரை, மனித வர்க்கமே நல்லது சொல்கிறது. ததாஸ்து. எல்லாரும் நல்லாயிருக்கனும். Something to do with விசுவப்ரேமா. உங்கள் ஆசி உங்களை விட மிகப் பெரிது. இது நான் சொல்லவில்லை, அவளுடைய வியாக்யானம். அவள் நிறையப் படித்திருக்கிறாள். நிறைய நம்பிக்கை உடையவள். நம்முடைய கலாசாரத்தில் Ph.D வாங்கி யிருக்கிறாள். அவள் காலேஜில் Professor. இன்னொரு ph D யில் இறங்கியிருக்கிறாள். என்ன தெரியுமா? லா.ச.ரா.வின் எழுத்துக்கள்!” சிரித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/468&oldid=1497450" இலிருந்து மீள்விக்கப்பட்டது