பக்கம்:அவள்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லூசி 435

'விஷயத்துக்கு வருகிறேன். அம்மா கொடுத்து, நீங்கள் வாங்கி என்னிடம் கொடுத்தால், நான் அவள் கழுத்தில் கட்டுவேன். இல்லாவிட்டால் எங்களுக்கு வேண்டாம். இது ஒன்று ransom இல்லை. கட்டாயம் இல்லை. தாலி ஒரு சின்னம்தான். வாழ்க்கையே ஒரு சின்னம்தானே! ஆனால் அவள் விரும்புகிறாள். ஆனால், கிடைத்தால்தானே உண்டு? இல்லாவிட்டால் என்ன செய்வது?

சொல்கிறாள்: தாவி கட்டாமலே நாம் கட்டில் இருப்பது நாம் ஒருவருக்கொருவர் ருசு. ஆனால் தாலி கட்டினால் அதை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொள்வதில் எவ்வளவு தைரியம், சந்தோஷம் தெரியுமா? அவள் வாதங்கள், எனக்கு சில சமயங்கள் புரிவதில்ல்ை. ஒரு மாதிரி லூஸ், Sentimental இதோ வருகிறாள்."

சிரித்துக்கொண்டே வந்து அவர்களுடன் உட்கார்ந்தாள்.

"இந்தப் பத்து வருடங்களில் உங்கள் இடையே பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும் அல்லவா?" சிரித்தாள். அவளுடைய ஜாக்கிரதையான, தயங்கிய இலக்கண பாஷை வேடிக்கையாயிருந்தது. மனதைத் தொட்டது.

'பேச்சு என்ன, உன்னைப் பற்றித்தான். பத்து வருஷங்களின் சப்ஜெக்டே நீதானே!"

அவள் சிரிக்கையில் விழியோரங்கள் சுருங்கின. விழிகள் நீலக் கடல்கள் பழுத்த கதிர்களின் மஞ்சள் பொன்னில், அவள் கேசம் மாலை வெயிலில் சோபித்தது. கனத்த, தடித்த, கட்டை இரட்டைப் பின்னல்கள் தோளைத் தொட்டுக் கொள்வது போல்தான் எட்டின. நெற்றிப்பொட்டில் பிரிகள் அலைந்தன. அழகி அல்ல. மது இவளிடம் என்னத்தைக் கண்டான்? ஆனால்—ஆனால்-ஏதோ—சொல்லத் தெரியவில்லை. ஒரு மிருக காந்தம்—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/469&oldid=1497451" இலிருந்து மீள்விக்கப்பட்டது