பக்கம்:அவள்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்று நேற்று நாளை 441



அப்படியானால் தினமே திருமணந்தானா?
இன்றுதான் இது எனக்குப் புரிகின்றதா?

அடுக்களையின் நீழல்கள் சூழ்ந்த இருளில் அடுப்பில் ஆடும் நெருப்புக் கொழுந்துகளில் சிவப்பு விட்டுவிட்டுக் கக்குகின்றது நெருப்பே, தான் சுண்டச்சுண்ட எரிந்து வடிக்கும் சத்துத்தானோ சிவப்பு?

சீதை குளித்த கெருப்பு.
நெருப்பின் புனிதம் சீதைக்கா
சீதையின் புனிதம் நெருப்புக்கா?

சமையல் முடிந்து, அடுக்களையின் புழுக்கம் போக முகம் கழுவி, கண்ணாடி பார்த்துக் குங்குமம் இட்டுக் கொள்கையில், பொட்டு வழக்கமான அளவுக்கு, சற்றுப் பெரிதாக விழுந்துவிட்டது. இட்டதைக் குறைக்க மனமில்லை. இன்று இப்படியே இருந்துட்டுப் போகட்டும்: இன்று நெருப்பை இட்டுக் கொண்டிருக்கிறேன்—அப்படித் தோன்றியதுமே இட்ட விடம் சுட்டாற் போலிருந்தது.

பிறகே, அவளுக்குத் தன் முழுவசத்தில் இருந்ததாய்த் தோன்றவில்லை.

'இன்று' 'இன்று'—என்று இறக்கைகள் அவள் கால்களில் தாமே பொருந்தி, பாதங்களைத் தரையில் பதிய விடவில்லை. ராச்சாப்பாடு, அது ஆனபின் அடுப்பை மெழுகி, அடுக்களையை அலம்பி, இதுபோல் நடக்க வேண்டி, இதர காரியங்கள், அவைகளில் தன் ஈடுபாடு—எல்லாமே திரும்பத் திரும்ப நடக்கும் தினசரி வாசனையில், தம்மைத் தாமே உந்திக்கொண்டு நிறைவேறி முடிவடைந்தன போல் தோன்றிற்று.

ஆச்சு, கொல்லைக் கதவையும் அடைச்சாச்சு.

ஊரோசை எப்பவோ அடங்கிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/485&oldid=1497699" இலிருந்து மீள்விக்கப்பட்டது