பக்கம்:அவள்.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல் 495

இவ்வளவு சுருக்க, இவ்வளவு நாள் பிரிந்திருக்கும் இந்தச் சமயத்தில், நம்மிருவரிடையிலும் நேர்ந்திருக்கும் ஒரு ஒரு பார்வையிலும், மூச்சிலும் தாழ்ந்த ஒன்றிரண்டு பேச்சுக்களும், நாடியோ, அகஸ்மாத்தாவோ, ஒருவர் மேல் ஒருவர் பட்ட ஸ்பரிசமோ, நினைவின் பொக்கிஷமாய்த் தான் தோன்றுகிறது. நாங்கள் அம்மாதிரி பொக்கிஷங்களைப் பத்திரமாய்க் காப்பாற்றுவதிலும் அவைகளை நம்பிக் கொண்டிருப்பதிலும்தான் உயிர் வாழ்கிறோம்.

என் தகப்பனாருக்கு வாசலில் யாராவது வயதானவர்கள் போனால், அவரை அறியாமலே அவர் கைகள் கூம்பும், 'என்னப்பா?' என்று கேட்டால் சொல்வார், 'அம்மா இந்தக் கிழவனார் வயது நான் இருப்பேனா என்று எனக்கு நிச்சயமில்லை. காலமோ அல்பாயுசுக் காலமாயிருக்கிறது. இந்த நாளில் இத்தனை வயசு வரைக்கும் இருக்கிறதே, காலத்தையும் வயசையும் இவர்கள் ஜயம் கண்ட மாதிரிதானே? இவர்களுடைய அந்த வெற்றிக்கு வணங்குகிறேன். அவர் வேணுமென்றே குரலைப் பணிவாய் வைத்துக்கொண்டு அப்படிச் சொல்கையில் ஏதோ ஒரு தினுசில் உருக்கமாயிருக்கும்.

ஏன், அவ்வளவு தூரம் போவானேன்? இந்தக் குடும்பத்திலேயே, ஆயுசுக்கும் ரணமாய், தீபாவளிக்குத் தீபாவளி தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் திருஷ்டாந்தம் இல்லையா? நீங்கள் இப்போது நால்வரா யிருப்பவர்கள். ஐவராயிருந்தவர்கள்தானே!

கடைசியில் எதைப் பற்றி எழுத வேண்டுமென்று. நினைத்திருந்தேனோ, அதுக்கே வந்துவிட்டேன். நீங்கள் இல்லாமலே நடந்த தலை தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பற்றித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/539&oldid=1497380" இலிருந்து மீள்விக்கப்பட்டது