பக்கம்:அவள்.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

496 லா. ச. ராமாமிருதம்



அம்மாவைப் பார்த்தால் ஒரு சமயம் பிரமிப்பாய்த் தானிருக்கிறது. அந்த பாரி சரீரத்துடன் அவர் எப்படிப் பம்பரமாய்ச் சுற்றுகிறார், எவ்வளவு வேலை செய்கிறார், ஒய்ச்சல் ஒழிவில்லாமல் சிறிசுகள் எங்களால் அவருக்குக் சரியாய்ச் சமாளிக்க முடியவில்லையே! மாடிக்குப் போய் அவர் மாமியாருக்குச் சிசுரூஷை பண்ணிவிட்டு, மலம் முதற்கொண்டு எடுக்க வேண்டியிருக்கிறது- வேறொருவரையும் பாட்டி பணிவிடைக்கு விடுவதில்லை-உங்கள் அப்பாவுக்குச் சிசுரூஷை பண்ணிவிட்டு..... அப்பாவுக்கு என்ன, இந்த வயசில் இவ்வளவு கோபம் வருகிறது: ஒரு புளியோ, மிளகாயோ, துளி சமையலில் தூக்கிவிட்டால், தாலத்தையும் சாமான்களையும் அப்படி அம்மானை ஆடுகிறாரே! அவரைக் கண்டாலே மாட்டுப் பெண்களுக்கெல்லாம் நடுக்கம். அழகாயிருக்கிறார், வழித்த கழி மாதிரி, ஒல்லியாய் நிமிர்ந்த முதுகுடன்; இந்த வயசில் அவர் தலையில் அவ்வளவு அடர்த்தியாய்த் தும்பை மயிர்! கண்கள் எப்பவும் தணல் பிழம்பாவே யிருக்கின்றன. அம்மா சொல்கிறார்: "என்ன செய்வார் பிராம்மணன்? உத்தியோகத்திலிருந்து ரிடையர் ஆன பிறகு பொழுது போகவில்லை. ஆத்தில் அமுல் பண்ணுகிறார். ஆபீஸில் பண்ணிப் பண்ணிப் பழக்கம்! இனிமேல் வளைக்கிற வயசா? வளைத்தால் அவர் 'டப்'பென முறிஞ்சு போவார். நான் பொத்தைப் பூசணிக்காய், 'பொட்'டென உடைஞ்சு போவேன். நாங்கள் இருக்கிற வரைக்கும் நீங்கள் எல்லாம் ஸஹிச்சுண்டு போக வேண்டியதுதான். இந்த மாடியிலிருக்கிற கிழவியை வந்த இடத்துக்குச் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒண்னு இருக்கு. அப்புறம்-'

'ஏன் அம்மா இப்படியெல்லாம் பேசறேன்?' என்பார் மூத்த ஒர்ப்படி.

"பின்னே என்ன, நாங்கள் இருந்துண்டே யிருந்தால், நீங்கள் உங்கள் இஷ்டப்படி எப்போ இருக்கிறது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/540&oldid=1497379" இலிருந்து மீள்விக்கப்பட்டது