பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

எனக்கு சிரிப்பு வந்தது. ஆனால் சிரிக்கவில்லை. பாவம், அவள் ஆசையை வீணகக் கெடுப்பானேன்! இருந்தாலும் எதாவது சொல்லவேண்டுமே, ஆகவே'பரஸ்பர உதவிதான்' என்றேன். அவளுக்குப் புரியவில்லை என்பது தெரிந்தது.

'படமுதலாளிகளும் வாழவேண்டும். . பத்திரிகைக்காரர்களும் வாழவேண்டும் அல்லவா! அதனால் தான் பிரமாதப் படுத்துகிறார்கள்' என்றேன். எனது பதில் 'எப்படி உருப்படும்?' என்ற கேள்வியாகத்தான் உதிர்ந்தது.

அவளாகவே சொன்னாள்:

'இன்றைக்கு ஒத்திகை உண்டு எல்லாரும் வரணும் அப்படின்னு சொன்னாங்க, வந்தோம் இங்கே வந்து இவ்வளவு நேரம் காத்திருந்த பிறகு, இன்னைக்கு ஒத்திகை வேண்டாம், இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம், எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்னு சொல்லிவிட்டாங்க, என்ன செய்யறது? இப்படி வந்துவிட்டுப் போறதுன்னு சொன்னா எவ்வளவு வீண் செலவாகுது? அதை யார் தருகிறா? ஸ்டார் வரணும்னா ஒரு தடவைக்கு ஒன்பது தடவை காரு போகுது நாங்க வெறும் எக்ஸ்ட்ராக்கள்தானே?.

எனக்கு அன்று -- படம் ஒன்றின் பிரத்தியேகக் காட்சியின்போது, -- தியேட்டரில் நடந்ததும், ' நாங்கள் ஆக்ட்ரஸ்கள்', என்ற கர்வ அறிமுகமும் நினைவில் எழுந்தன. அவர்கள் நகர்ந்ததும், வாசலில் நின்றவன் முனகியதும் ஞாபகத்திற்கு வந்தது. பெரிய இவளுக! ஆக்ஸ்ட்ரஸ்களாமில்ல, ஆக்ஸ்ட்ரஸுக! தெரியாதாக்கும், எக்ஸ்ட்ராஸா இருப்பாளுக, இருந்தாலும் ஜம்பத்துக்குக் குறைச்சல் இல்லை!'