பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

படங்களைப் பார்த்திருக்கிறாள். அவற்றின் மூலம் அவள் அறிந்தது என்ன? தமிழ்ப் படத்திலே நடிக்க நடிப்புத் திறமை. தேவையில்லை சும்மா அலங்காரப் பாத்திரமாக வந்து வந்து போனால் போதும். பாடும் திறமைக்கூடத் தேவையில்லை, 'பிளே பாக்' முறை என்று ஒன்று இருக்கிறதாமே அதன்படி சரிக்கட்டிக்கொள்வார்கள். நாட்டியம் கலாபூர்வமாகத் தெரிய வேண்டும் என்றில்லை கைகளை ஆட்டி, கால்களை உதைத்து, இடுப்பை நெளித்து, குதித்துக் குதித்து ஆடினால் போதும் அவள் 'டிரில்' செய்து பழகியவள் தான். ஸ்கிப்பிங், ஜம்பிங் எல்லாவற்றிலும் தேர்ந்தவள் தான். அதனால் சினிமாவுக்குத் தேவையான டான்ஸை சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம். பாட்டு என்று கத்தும் திறமை அவளிடமிருந்தது. நடிக்க முடியும் என்ற நம்பிக்கையிருந்தது, அப்புறமென்ன? அவள் ஏன் சினிமா நடிகையாக முடியாது? இல்லை, ஏன் ஆகக்கூடாது?.....

இப்படி. அடிக்கடி எண்ணி வந்த அவளுக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. அவளுக்குத் தந்தையில்லை. தாய் தான் இருந்தாள் அவளிடம் தன் ஆசையைத் தெரிவித்தாள். அவளோ 'உனக்கு எதுக்கு இந்தப் புத்தி? ஒழுங்காக லட்சணமாயிரு. வர்ர தை மாசத்திலே கலியாணத்தைப் பண்ணி வைக்கலாம்னு நான் அலைஞ்சு திரிகிறேன். இவள் என்னடீன்னா கூத்தாடிச்சியாக போகப் போகிறாளாம்' என்று சீறினாள். அதற்காக அவள் ஆசை ஒடுங்கி விடுமா? சமயம் பார்த்திருந்து ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சென்னைக்கு டிக்கட் எடுத்துவிட்டாள்.

சினிமாவில் சேர்ந்துவிடவேணும் என்கிற ஆசை இந்த யுகத்திலே எத்தனை எத்தனையோ பேர்களை -- ஆண்களையும் பெண்களையும் தான் பற்றிக் கொண்டு விடாது ஆட்டி வைக்கிற வியாதி, இதற்குக் காரணம் புகழப்பசியும், சுலபமாகப் பணமும் நிறையப் பெற்றுவிடலாம், இவற்றால் பெருமையோடு வாழலாம் என்கிற ஆசையும் தான் அதனால் எத்தனையோ பெண்கள் ஊரை விட்டு ஓடிவந்து விடுகிறார்கள். 'கெட்டும் பட்டணம் சேர்' என்கிற பழமொழியை