பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

இப்படி வீணாகக் கெட்டுப் போகிறார்கள் எத்தனையோ பேர். சினிமாவில் சேர்ந்தால் பணமும் புகழும் ஏராளமாகக் கிடைக்கும் என்ற எண்ணம் போலும். இவளுக்கு வயது பதினெட்டு, பத்தொன்பது தான் இருக்கும். வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடி வந்து விட்டாள். பட்டணத்துக்குப் போன உடனேயே சினிமா ஸ்டார் ஆகி விடமுடியும் என்று வெளியூரில் உள்ள சிங்காரிகளும் ஒய்யாரிகளும் சில யுவதிகளும் எண்ணிக் கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது.... கட்டவிழ்ந்து புரண்டு நெளியத் தொடங்கிய சிந்தனைக்கு தடை விதிக்க வேண்டியதாயிற்று. வேறு அலுவல் குறுக்கிட்டதால்.

அப்புறம் நான் அவளைப்பற்றி கவலைப்படவேயில்லை. அவளின் சாயை நினைவுப் பரப்பிலிருந்து மங்கி மாய்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குத் துணைபுரிந்த நீண்ட இடைவேளைக்குப் பின் மறுபடியும் அவளை நான் சந்திக்க முடிந்தது.

எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்திலே தான்.

புதிதாகத் திரைக்கு வரத் தயாராகிவிட்ட படம் ஒன்றின் பிரத்தியேகக் காட்சிக்கு எனது நண்பர் ஒருவரோடு நானும் போயிருந்தேன்.

படம் ஆரம்பிக்க கொஞ்ச நேரம் தானிருந்தது. வாசலை மறைக்கத் திரை தொங்கவிட ஆயத்தம் செய்து கொண்டிருந்தவனிடம் யாரோ கனத்த குரலில் பேசுவது கேட்டது. அதட்டலாக விழுந்தது. ‘ நாங்கள் உள்ளே போகணும், வழிவிடு!’ என்று. அவன் இடமில்லை; உள்ளே அனுமதிக்க முடியாது என்று சொன்னான். ‘ ஏன் முடியாது ? நாங்க ஆக்ட்ரஸ்களாக்கும்!’ என்றாள் முதலில் பேசியவள்.

‘அட யாரடா அவ? ’ஆக்ட்ரஸாமே!’ என்ற மனக் குறிப்பு வழிகாட்ட பார்வை வாசல் பக்கம் உருண்டது பலருக்கு. நானும் திரும்பிப் பார்த்தேன்.

பகட்டாக ஆடை அணிந்த ‘அக்காள்’ ஒருத்தி, அவள் அருகில் நின்றாள். ஒரு ‘தங்கச்சி,’ சிறியவள் தோற்றம்