பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தான் என்னைத் திடுக்கிட வைத்தது. அவள் பல மாதங்களுக்கு முன்பு சினிமாவில் சேர வேண்டும் என்ற ஆசையோடு வந்த சகோதரிதான்.

‘பரவால்லேயே ! சினிமா சான்ஸ் கிடைத்து விட்டது போலிருக்கு. எப்படிக் கிடைத்தது? யாரைப் பிடித்து எப்படி .....’என் மனம் கேள்விகள் எழுப்பியது. பார்வை வாசல் பக்கம் நடந்த நாடகத்தை இரசித்தது.

வாசல் காத்து நின்றவன் அவர்களை அனுமதிக்க முடியாது என்றான். பெரியவள் உரிமைக் குரலில் வாதாடி நின்றாள். பிறகு அவசரமாகப் போய் யாரையோ பார்த்துப் பேசி, தாராளமாக உள்ளே நுழைந்து விட்டாள். மற்றவள் அவளை விட்டு நீங்கா நிழலாகவே இயங்கினாள்.

‘போகும் இடமெல்லாம் லட்சியசித்தி தான் போலிருக்கு, பேஷ் !’என நினைத்தேன்

இரண்டு ‘ஆக்ட்ரஸ்’களும் கர்வமாக நடந்து, எல்லோரையும் பார்த்தபடி - எல்லோரும் தங்களைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்போடு-முன்னேறி இடம் பிடித்தார்கள்.

படம் முடிந்து வெளியே வரும்போது, கும்பல் கலையட்டுமே என்று நான் பின் தங்கி நின்றேன். அந்தப் பக்கமாக வந்தார்கள் அவர்கள் இரண்டு பேரும். ‘எப்பவோ ஒரு தடவை பார்த்தது, மறந்திருப்பா’ என்று நினைத்தேன். அது தப்பு என்று சுட்டிக் காட்ட விரும்பியது போல் துடித்தது அவள் பார்வை. செஞ்சாயம் மிகுந்திருந்த உதடுகளில் சிரிப்பு பூத்தது. அவள் அங்கேயே நின்று விட்டாள்.

‘நமஸ்காரம்’ என்றாள்.

அநேகம் ஜோடிக் கண்கள் எங்கள் பக்கம் நீந்தியதில் வியப்பு என்ன இருக்க முடியும் ?

குறும்பாகச் சிரித்த படி அவள் கேட்டான்: 'என்னை ஞாபகம் இருக்கிறதா, ஸார் ? நான் சினிமாவில் சேர்ந்து விட்டேன்."

‘ஓ! சந்தோஷம்’ என்றேன்.