பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

"அது தான் ஆளைப் பார்த்தாலே தெரியுதே. உன் கூட. நிற்பவளே அரைகுறையாப் பார்த்தாலே போதுமே :- இப்படி நான் சொல்லவில்லை. எண்ணிக் கொண்டேன்.

எப்படிச் சேர்ந்தாள் ; சினிமா அனுபவம் எப்படி யிருக்கிறது ; அவள் எதிர்பார்த்தபடி உள்ளதா எவ்வளவோ கேட்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் இடம், பொருள், ஏவல் என்கிறார்களே. அது ஒன்றும் சரிப்பட்டு வராததனால் நான் மெளனமாக நின்றேன். தோழி துரிதப்படுத்தியதால் அவளும் நகர்ந்து கூட்டத்தில் கலந்தாள்.

பிறகு அவளை நான் சிலசமயம் பார்த்தது .உண்டு. அவளும் தோழியும் பீச்சிலோ, மெளண்ட் ரோட்டிலோ, சென்ரல் ஸ்டேஷன் சமீபத்திலோ நடந்து சென்ற போது பார்த்திருக்கிறேன். எதிரும் புதிருமாகச் சந்தித்தது இல்லை.

பலப்பல மாதங்களுக்குப் பின்னர் சந்தர்ப்பம் மீண்டும் அவளை என் முன் கொண்டு வந்து சேர்த்தது.

படக் கம்பெனி ஒன்றிலே தான். படமுதலாளி ஒரு வரைக் காணச்சென்ற எனது நண்பரோடு நானும் சும்மா போயிருந்தேன். நண்டர் ஆபீஸ் அறைக்குள் போனபோது, நான் வெளி ஹாலில் உட்கார்ந்திருந்தேன். வீணாக .உள்ளே போவானேன் என்றுதான். அப்போதுதான். அவளைக் காண முடிந்தது.

சிரத்தையோடு சிங்காரித்து வந்திருந்த அலங்காரிகள் தனித் தனியாகவோ, இரண்டு மூன்று பேராகவோ அங்கு மிங்கும் சுழன்று கொண்டிருந்தார்கள். அவளும் நின்றாள் அங்கே. அவள் ஒரு எக்ஸ்ட்ரா என்பது அவ்ள் நடையிலே, உடையிலே, நின்ற நிலையிலே, பார்க்கும் தினுசிலே, அசையும் நெளிவிலே ஒவ்வொரு பண்பிலும் விளம்பரமாகிக் கொண்டிருந்தது. அவள் தற்செயலாக என்னைப் பார்த்தாள். பார்வையை மீட்டுக் கொண்டாள்.

"மறந்திருப்பாள். ரொம்ப நாளாச்சல்லவா!' என்று நினைத்தேன். -