பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

 “கண்ணா, உன் நோக்கமும் எனக்குப் புரிகிறது, என் அம்மாவுடைய மனமாற்றமும் எனக்குப் புரிகிறது. உனக்குக் குழந்தை இல்லாததால் உன் மீதுள்ள பிரியமெல்லாம் மீனாவின் பக்கம் போய்விட்டது. அதற்குக் காரணம் அவளுக்குக் குழந்தை இருக்கிறது என்பது உனது மனக்குமுறல் ! என் அம்மாவின் அன்பை இழந்ததற்கு நீ மட்டும் பொறுப்பாளி அல்ல. நானும் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியவன்தான்! இதில் எதற்கு ஒளிவு மறைவு எல்லாம்?’’

“இருந்தாலும் அத்தை என்னை இவ்வளவு அசிங்கப்படுத்தியிருக்கவேண்டியதில்லை. நான் அவர்களை எவ்வளவோ மதித்தேன். மரியாதை செலுத்தினேன். அவர்கள் அதை வர வரப் பொருட்படுத்துவதே இல்லை. எல்லாமே மீனாதான் அவர்களுக்கு! அதனாலே மீனாவும் என்னை மதிப்பதில்லை. “அக்கா அக்கா’’! என்று அன்பொழுகப் பேசிய மீனா இப்போது ஜாடை பேசத் தொடங்கிவிட்டாள்’’

“மீனா ஏழை வீட்டுப்பெண்; நம் குடும்பத்திற்குப் பொருத்தமானவள்; கருப்பாகஇருந்தாலும் கவர்ச்சியாக இருக்கிறாள் என்று என் தம்பிக்கு மீனாவை முடித்துவைத்தவளே நீதானே!’’

“அதையெல்லாம் இப்போது யார் நினைத்துப் பார்க்கிறார்கள்! மீனாவின் தாயும் தகப்பனும் நம்ம வீட்டுக்கு நடையாய் நடந்தார்கள். நீ சொன்னால்தான் உன் மாமி கேட்பாள் என்று என்னைக் கெஞ்சாக் குறையாகக் கேட்டார்கள். இப்போது அவளிடம் நான் படுகிறபாடு சொல்லத் தரமில்லாத தாகிவிட்டது!”

“இதெல்லாம் ஒரு பெரிய. குடும்பத்தில் நடக்கக்கூடிய சம்பவங்கள் தான்! அதற்காக உன் மனக்குறையை நான் மதிக்காமல் இல்லை கண்ணா!”

“எனக்குப் பிராப்தம் இவ்வளவுதான் என்று நினைத்து மீனாவின் பிள்ளையை என் பிள்ளையாக எண்ணி மகிழக்கூட அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள், பிள்ளையைத் தூக்கிக்கொஞ்சினால் வேலைக்காரியை அனுப்பி குழந்தையைப் பிடுங்கி வைத்துக் கொள்கிறார்கள்.’’

கண்ணாவின் இந்தப் பிடியிலிருந்து கண்ணப்பனால் தப்ப முடியவில்லை.

“என்ன இருந்தாலும் நீ தான் மூத்த மருமகள். அதை யாராலும் குறைத்து விட முடியாது. மீனா எத்தனை பிள்ளைகளைப் பெற்றாலும் இந்த வீட்டில் உனக்குள்ள உரிமை அவளுக்கு வந்து விடுமா, அல்லது அவள்தான் உனக்கு மூத்தவளாகிவிடப் போகிறாளா?’’