பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



13


மீனா வாயடைத்துப் போனாள், ஏனெனில் கண்ணப்பனும், மீனாவும் ஒரு நாள் கூட நேருக்கு நேராக நின்று பேசிக் கொண்டதில்லை. தன் கணவரோடு பிறந்த மூத்தவரை தமிழ்நாட்டுப் பெண்கள் அவ்வளவு உயர்வாக மதிப்பார்கள்.


நாட்கள் செல்லச் செல்ல கண்ணாவின் உள்ளம் மேலும் துயரத்திற்கு இலக்காகிவிட்டது. அந்த அனல் கண்ணப்பனையும் லேசாகச் சாடியது. எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம் என்று சொல்லுவது வெறும்பேச்சல்ல. அது ஒரு தத்துவம்! பெரிய உண்மை. நமக்குப் பிடித்தமானவர்கள் பாதிக்கப்பட்டால் நமக்கும் மனம் துடிக்கிறது. நமக்கு வேண்டாதவர்கள் சகிக்க முடியாதபடி துன்பப்பட்டால் கூட நம் மனம் தூக்கத்திலிருந்து கண் திறக்க மறுத்து விடுகிறது.

"கண்னா குடும்பம் என்பது ஒரு குருவிக் கூடு மாதிரி, அதில் ஆயிரம் பின்னல்கள் இருக்கும் என்று நீ வந்த மறுதினமே சொன்னேனே இப்போது ஞாபகம் இருக்கிறதா?”

"நீங்கள் குருவிக்கூடு என்றுதானே சொன்னீர்கள் ? இது பாம்புப் புற்றாக அல்லவா அத்தான் மாறி விட்டது?"

"கண்ணா, உன் மனத்தை ஆற்றுவதற்கு தான் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்."

"எத்தனை நாளைக்குத்தான் மகாத்மா சொன்னார் மறைமலை சொன்னார் என்ற உபன்யாசங்களை நான் தாங்கிக் கொண்டிருப்பது?"

"கண்ணா, நீ ஒரு சுத்தக் கர்நாடகம்! தத்துவங்களே ஒரு மன ஆறுதலுக்காக சிருஷ்டிக்கப் பட்டவைதான். அவைகளில் சிலது மனதுக்கு இதம் அளிக்கலாம். ஏதாவது உன் மனதைத் தொடுகிறதா என்றுதான் தொடர்ந்து எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் எதுவும் உன் நெஞ்சை நெருங்கக் கூட. முடியவில்லை."

"இப்படியே பேசிப்பேசி காலத்தை ஓட்டி விடலாம் என்ற எண்ணமா?”

"பொறு கண்ணா! உன்னையும் அழைத்துக் கொண்டு எர்ணாகுளத்திற்குப் போய் குடியேறுவதாக முடிவு செய்து விட்டேன். அப்பாவிடமும் நேற்று இரவே பேசிவிட்டேன். வருகிற வெள்ளிக்கிழழை நாம் எர்ணாகுளம் போகிறாேம்!"