பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


உங்கள் மாமனார் எழுதியிருக்கிறார். என்ன எழுதியிருப்பார் என்று உங்களுக்குத் தான் தெரியுமே! அவர் கவலை அவருக்கு!

"உனக்கு வளைகாப்பு வைக்க எனக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டதே என்று எழுதியிருக்கிறாரா கண்ணு?"

"அதுதான் சொல்லி விட்டீர்களே! அதேதான்!"

"நாட்டிலே பிள்ளைகளுக்கா பஞ்சம்! எத்தனையோ பேர் பிள்ளைகளை ஏராளமாக பெற்றுப் போட்டு விட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவைகளில் நாம் ஒன்றை எடுத்துக் கொண்டால் போகிறது! இதற்கு ஏன் கப்பல் மூழ்கி விட்டதைப் போல் கண்களைக் கசக்கிக் கொண்டே இருக்க வேண்டும்?"

"ஊரார் பிள்ளையை எடுத்து வளர்த்துவிடலாம்; அதை ஊர் ஒப்புக் கொள்ளுமா? உங்களுக்கும் எனக்கும் உள்ள அவப்பெயர் தான் போய்விடுமா?"

"ஊர் இது வரை எடுத்தவுடன் எதையாவது ஒப்புக் கொண்டிருக்கிறதா? அதிலும் சொந்த ஊர் - பிறந்த ஊர் எதையாவது பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டதாகச் சரித்திரம் உண்டா? கஷ்டப்பட்டு ஒருவன் பணக்காரனாகி விட்டால் அவனைக் கள்ள நோட்டுக்காரன் என்பார்கள். உண்மையிலேயே ஒருவன் கள்ளநோட்டின் மூலம் பணக்காரனாகியிருப்பான். அவனை இந்திரன் சந்திரன் என்று வர்ணிப்பார்கள். கண்ணா நான் சொல்லுவதை நம்பு. ஊருக்காக வாழ்ந்தவர்கள் யாரும் இறுதிவரை நிம்மதியாக இருந்ததே இல்லை. உனக்குக் குழந்தை வேண்டும்; அதை நீ கொஞ்சி மகிழ வேண்டும். எனக்கும் புரியாமலில்லை, குழந்தைகள் பூக்கள் மாதிரி. அவை எந்தத் தோட்டத்தில் மலர்ந்தாலும் அவைகளின் மணம் மாறாது: கொல்லையிலே பூக்கும் மல்லிகைக்கும் கோயில் நந்தவனத்திலே பூக்கும் மல்லிகைக்கும் வித்தியாசம் உண்டா? ஏழை வீட்டுக் குழந்தை மூக்கிலே சளியை வடித்துக்கொண்டு தெருவிலே விளையாடும் : பணக்கார வீட்டுக் குழந்தை பளிங்குத் தரையில் ரப்பர் பொம்மைகளை வைத்து விளையாடும்! ஆனால் இரண்டு குழந்தைகளின் முகங்களிலே கூத்தாடும் மகிழ்ச்சிப்பெருக்கு ஒரே மாதிரியானதுதான்" கண்ணப்பன் இப்படி அடுக்கிக் கொண்டே போனான்.

"அத்தான் நீங்கள் எதைத்தான் சொல்லுங்கள்; அதெல்லாம் படிக்கத்தான் பயன்படுமே தவிர நடை முறைக்கு ஒத்துவராது."

"எனக்கும் பொழுது போகவேண்டும்: உனக்கும். கவலை ஒழியவேண்டும், கண்ணா நீ இப்போது என்னதான்