பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

என்ன பாஸ்???

"மான் மருளுவதைப் பார்த்தாயா?"

"இளங்கன்று பாஸ்! துருதுருவென்று இருக்கும் இருவிழிகள் தொட்டால் சிவக்கும் பருவப்பதுமை!’

"போதும்!” -

இந்த உரையாடல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் சுபத்ரா. இரண்டு போலீஸ்காரர்கள் அவளருகே வந்து கொண்டிருந்தார்கள்.

'ஏய், யார் நீ?" என்றான் ஒருவன்.

"எங்கே புறப்பட்டே சொகுசா?" என்றான் அடுத்தவன்.

"பெரிய ஸ்டார் மாதிரியில்லே கெளம்பிட்டா, டிக்கட் போடுறவ போலேருக்கு" போலீசாரின் பேச்சு அத்துமீறியது.

"பிராத்தல் கேசப்பா இது! பட்டணத்துக்கு ஏற்றுமதியாகுது! ம்...! கிளம்பு ஸ்டேஷனுக்கு!" என்று ஒருவன் மிரட்ட அடுத்தவன் லத்தியை வைத்து சுபத்ராவைத் தள்ள-அவள் எப்படியோ ஒரு டாக்சியில் ஏற்றப் பட்டாள்.

அழகு சில பெண்களுக்கு வாழ்வின் சூரியோதயமாக அமைகிறது; வேறு சிலருக்கு வாழ்வின் அஸ்தமனமாக ஆகிவிடுகிறது.

"இப்ப எங்கே போகணும்?" டாக்சிக்காரன் கேட்டான்.

"போய்க்கொண்டே இரு! இப்ப எந்தப் பாதையில் போகிறாய்?"

"நாகர்கோயில் பாதை இது!"

"ரொம்பச்சரி!"

சுபத்ரா தீக்குளித்தவளைப்போல் காருக்குள் சுருண்டு கிடந்தாள். மயக்கம் அவளைப் புரட்டிப் புரட்டிப் போட்டது .

"மூன்று வருஷத்துக்கிடையிலே இப்படி ஒரு உருப்படி கெடச்சதே. இல்லை. இன்று நமக்கு நல்ல லக்கு!'

சுபத்ரா திகைத்தாள். இவர்கள் உண்மையான போலீஸ்காரர்கள் இல்லையென்று அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.