பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


மாற்றி மாற்றி முத்தங்களைப் பதித்தார். வெளிச்சத்தை இருட்டாக்கிட்டு, நாம இரண்டாவது முதலிரவைக் கொண்டாடினால்தான் நாம தொடங்கப்போற புது வாழ்க்கைக்குப் புதுமையான பொருள் கிடைக்கும். இல்லையா கண்ணே, கண்மணியே!”-- கெஞ்சியும் கொஞ்சியும் கண்ணடித்துக் கண்களைச் சிமிட்டினார், ரேவதியின் ஞானசீலன்,

“நீங்கள் பேசறது உண்மைதான், அத்தான். இனி மேல் நீங்கள் பொய் பேசமாட்டீங்க. ராயல் சாலஞ்சிலே சாத்திரத்துக்காகத் துளி மிச்சம் வச்சிட்டு பாக்கி எல்லாத்தையும் நீங்கள் முடிச்சிடுங்க, இந்தா ஒரு நொடியிலே நான் வந்திடறேன்” என்று சொல்லி, அன்பின் பிடியினின்றும் திமிறி விடுதலை பெற்றாள்.

அவளை அவ்வளவு இலகுவிலே விட்டு விடுவாரா? “இனிமேல் உன்னை விட்டுட்டு ஒரு கணம்கூட என்னாலே பிரிஞ்சிருக்க முடியாது”. முந்தானை தப்பி விட்டால் என்னவாம்? தாலி அகப்பட்டுக் கொண்டது. மறு வினாடியில், “ரேவதிப் பொண்னே! அழுதியா, என்ன?” என்று உடல் அதிர, உள்ளம் அதிரக் கேட்டார், ஞானசீலன்.

“இது ஆனந்தக் கண்ணீர்” என்று சமாதானம் படித்தபின் மீண்டும் விடுதலை அடைந்தாள்.

நகர்ந்தவள் நின்றாள். கண்ணீர் பெருகியது. கொண்டவரை-உயிர் கொண்டவரை மீண்டும் மீண்டும் பார்த்தாள். “இதோ, வந்திடறேன்” என்று விடைபெறுகிறாள். கண்ணீர் மாத்திரம் விடைபெறவில்லை!

ஞானசீலனின் அழகான கண்கள் மேலும் சிவந்தன.