பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

x

தனி வழியே தனக்குச் சதமென்று உணர்ந்து, கைத்துப்பாக்கியைச் சரண் அடைகின்றாள்! எச்சில் பழமாமே? சே! என்ன உலகம் இது!... என்ன வாழ்க்கை இது? என்ன மாயச் சோதனை இது? ‘வாழ்க்கையோட எல்லா நிலைகளிலேயும் நானே உசத்தியாய் நின்னு, முன் உரிமை பெற்று விளங்க வேணும் என்கிற லட்சியத்துக்காகப் போராடி, என் மானம் மரியாதையைப் பத்திரமாகவே காப்பாற்றிக்கிட அல்லும் பகலும் அரும்பாடு பட்டுக்கிட்டிருந்த எனக்குக் கடைசியிலே வெகுமதி இப்படிப்பட்ட மிருகத்தனமான கேலிப் பேச்சும் மனிதாபிமானம் இல்லாத அவமானமும் தானா??’ நிதர்சனமான யதார்த்த வாழ்க்கையிலே தோற்றுப் போன அவளுக்கு-ரேவதிக்கு -- டாக்டர் ரேவதிக்கு அழவும் தெரிந்தது; தெரிந்திருந்தது! -அந்த உருவம் மீண்டும் மீண்டும் நெஞ்சிலும் நினைவிலும் நிழலாடியது!...

அதோ, துப்பாக்கி தயார்!

ஒன்று...

இரண்டு...

‘மூன்று’ என்று அவள்-டாக்டர் ரேவதி-உச்சரிக்க ஆயத்தமாகிறாள். மங்கலத்தாலி ஊசலாடியது!

அப்போது-

கதவு தட்டப்பட்டது.

‘தட்டுங்கள்; திறக்கப்படும்’ என்னும்படியான வேதம் பொய்த்து விடுமா?-பொய்த்து விடலாமா?

திறந்தாள் ரேவதி!

அங்கே-

மிஸ்டர் ஞானசீலன் அதோ, டாக்டர் ரேவதியின் ‘மணமகன் தேவை’ போட்டிக்கெனத் தயாராகத் தோன்றுகிறார்!

ஞானசீலன் யார், தெரியுமோ?

டாக்டர் ரேவதியின் மனக்கணக்கின் கணிப்புப் பிரகாரம் குற்றவாளியான அந்த ஞானசீலன், யாராம்?

அது ‘சஸ்பென்ஸ்’!