பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

“உத்தரவின்றி உள்ளே நுழையக் கூடாது!” என்ற விளம்பரப் பலகையைப் பார்க்காமலே, டாக்டரின் கதவைத் தள்ளினார். நோய் நொடி கூட உத்தரவில்லாமல் தானே உடலுக்குள் நுழைந்து விடுகிறதென்று நினைத்திருக்கலாம், அவர்.

அதற்குள் இளம் பூச்சிட்டு கீதா பின்புறமிருந்து விரைந்து வந்து தடுத்தாள். “பெரியவரே, நீங்க இந்தப் போர்டைப் பாருங்க; ஐயா சின்னவரே, அந்த எச்சரிப்பை நீங்களும் வலியோட வலியாய் பார்த்துக்கங்க” என்று உபதேசம் செய்தாள். அது கீதா உபதேசமாகவும் இருக்கலாம்!-அந்த மருத்துவப் பணிக் கன்னியின் பெயர், கீதாதானே? டாக்டரம்மா இன்னும் வரவில்லை என்பதையும் அவள் தெரிவித்தாள்.

இடம் காட்டியது, ஸ்டூல்.

இடம் கண்டது, இளவட்டம்.

சற்று நேரத்தில், காரில் இருந்து இறங்கி கம்பீரமாக நடந்து, முன் கூடத்திலே வந்து நின்றாள், லேடி டாக்டர் ரேவதி. முறி மேனிக்கு தும்பைப்பூ மூக்குத்தி எடுப்பு.

நோயாளிகள் தங்கள் தங்கள் நோய் நொடிகளை மறந்து எழுந்து நின்றார்கள்.

தளதளத்த ‘ஜிஃபான்’ பட்டுச் சேலையின் மார்பகப் பகுதியில் மையம் கண்டு, அனந்த சயனத்தை மேற்கொண்டிருந்த கழுத்துச் சங்கிலியின் மயில் பதக்கத்திற்கு ஆயிரமாயிரம் முத்தங்களை அலுக்காமல் சலிக்காமல் வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்த ‘ஸ்டெத்தஸ்கோப்’ நீண்ட நெடுமூச்சுத் தூள் பறக்க, ஒருமுறை முறையாக குலுங்கி அடங்கியது.

“வணக்கங்க, டாக்டரம்மா!”

“வணக்கம்...வணக்கம்!”

“குட் ஈவினிங், மேடம்!”