பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


“எஸ்...எஸ்!”

அப்பொழுது காலை வெளியில் ‘செவர்லே’ ஒன்று வந்து நின்றது; சென்றது.

ரேவதி ஒரு கணம் அதிர்ந்தாள். மறுகணத்தில், அவள் சமன் நிலையை அடைந்தாள்! “இது கண்றாவிக் கறுப்பு செவர்லேயாக்கும்!” உள் நெஞ்சில் எதையோ நினைத்திருப்பாள்; வேறு எதுவோ முளைத்திருக்கும்!-சலனமும் சாந்தியும் நடத்திய கண்ணாமூச்சி விளையாட்டிலே, அவளது அழகான முகத்திலும், கவர்ச்சியான கன்னங்களிலும் ஈரவேர்வை கசிகிறது.

புதுக்கோட்டை ராஜ வீதிகளில் நானும் அவரும் புதுமணத் தம்பதியாக புத்தம் புதிதாக ரோஸ் செவர்லேயில் ராஜ உலா வந்த அந்த நாட்களை என்னாலே எப்படி மறக்க முடியுமாம்?

ஆச்சி ஒருத்தி, “அம்மா நான் புதுக்கோட்டைப் பக்கம்” என்று கூறி நெருங்கினாள்.

“அப்படியா? போய் உட்காருங்க!”

நோயாளிகள் கூடம் இப்போது ‘கப்சிப்’!...

வாயைப் பொத்திக் கொண்டு வயிற்றைப் பிசைந்தபடி நல்ல பிள்ளையாக நின்றிருந்த இளைஞனை நெருங்கினாள், ஊடுருவிப் பார்த்தாள்; பார்வையிட்டாள். உள்ளே வருமாறு சமிக்ஞை செய்தாள். நெற்றித் திலகம் மங்களமாகப் பொலிந்தது. முகப்பருக்கள் பளிச்சிட்டன.

முதலில் ரேவதி அறைக்குள் விரைந்தாள்.

அடுத்து, ஒடிந்து விழுந்து கொண்டிருந்த இளைஞன் இளமைக் கோலம் தாங்கி உள்ளே புகுந்தான்!

அவனுக்கும் ஒரு பெயர் இருந்தது-முத்தையன்!

கதவுகள் ‘படீ’ரென்று சாத்திக் கொள்கின்றனவே!...