பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

விசாரிக்காட்டி, இனி விசாரிச்சுப் பாருங்க! நான் ரேவதி! கைராசியிலே ஓகோன்னு பேரெடுத்த கார்டியாலஜிஸ்டு டாக்டர் ரேவதி நான். ஊம், நீங்கள் போகலாம்!” என்று கட்டளையிட்டாள், ரேவதி.

“நான் கொடுத்த பாக்கிப் பணத்தைக் கோட்டை விட்டுடப் போறீங்க; ஜாக்கிரதை!” ஒய்யாரக் கொண்டைக்குச் சிவப்பு விளக்கைக் காட்டவும் தவறி விடவில்லை, அவள்.

மந்தாகினியின் பவுடர் முகத்தில் அசடு வழிந்தது; துடைத்துக் கொண்டாள். கரிய நிறம் எட்டிப் பார்த்தது. “செவர்லேட்டு கார் இனிமே எங்கே திரும்பப் போகுது?... கவிஞர் தெரு வரைக்கும் நடந்தே போயாகணும்; வாரேனுங்கம்மா; நீங்க பிள்ளை குட்டிங்களோடு ரொம்பவும் நலமா இருப்பீங்க!” வக்கணையாகப் பேசியவள், வக்கணையாக வெளியேறினாள்.

தூறல் நின்று விட்டது.

மந்தாகினி ரொம்பவும் சாகசக்காரியாகத்தான் இருக்க வேண்டும்; பட்டணத்துக் கைகாரியாகவும்தான் இருப்பாள் போலிருக்கிறது!

நோயாளி முத்தையன் நிம்மதிப் பெருமூச்சோடு டாக்டர் ரேவதிக்கு அன்போடு வழி விடுகிறானே?

ரேவதியின் இதயத்தில் உறுத்தல்தான் மிஞ்சியது.

மறுபடி மனம் சதுரங்கம் ஆடியது. கண்களை மூடினாள். கூப்பிட்ட குரலுக்குப் பயந்தும் பணிந்தும் அந்த ‘செவர்லே’ ரோஜாப்பூ நிறத்தில் புதுக்கருக்கோடு மின்னிய வண்ணம் வண்ணப் பதுமையாக ஓடோடி வந்தது.

கண்களைத் திறந்தாள்! ‘செவர்லே’ எங்கே?