பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

கொடுத்தாள்; அப்புறம், கண்களை மேலே உயர்த்தினாள்; “டாக்டரம்மா! உங்கள் வீட்டுக்கார ஐயா சுகமாக இருக்காகளா? பிள்ளை குட்டிங்க எத்தனை?” என்று. இயற்கையாகச் சேர்த்திருந்த அன்போடு விசாரித்தாள், மீனாட்சி.

கேள்விகளின் அதிர்ச்சியில் இருந்து விடுதலை பெற முடியாமல், மனம் தவித்தாள், ரேவதி.

“சரி, சரி, நீங்க போங்க, அம்மா வீட்டுக்குப் புறப்பட வேணும்; இன்னும் பத்து நாளைக்கு டாக்டரம்மாவுக்குப் பங்களாவிலேயும் கடுமையான வேலைங்க இருக்கு!” என்று மெல்ல மெல்லக் கூறினாள், கீதா.

ஆனால், எதுவுமே அம்மணிக்கு உறைத்தால்தானே? “ஆத்தா, என்னை ஏழே ஏழு வருசத்துக்குள்ளவே மறந்து போயிட்டீங்களே? நீங்கள் புதுக்கோட்டையிலே ராணி ஆசுபத்திரிக்கு எதிர்த்தாப்பிலே சின்னமாக ஒரு கிளினிக்கையும் நடத்திக்கினு இருக்கையிலே, நான் புதனுக்குப் புதன் அரிமளத்திலேருந்து வந்து உங்கள்கிட்டே சோதனை பண்ணிக்கினு போவேனுங்களே? அந்த மீனாச்சி நானேதாங்கம்மா!” என்று விவரத்தை வேக வைத்து இறக்கின. பிட்டு மாதிரியாகப் பிட்டு வைத்து விட்டு, ஓசைப்படாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

உள் மனத்தின் அடிவாரத்தில் ஏற்பட்ட பயம் செறிந்த சலனம் அப்போது ரேவதியை என்னவெல்லாமோ பண்ணியது. “உங்கள் வீட்டுக்கார ஐயா சுகமாக இருக்காகளா?” ஆச்சி விதியாகவோ, அல்லது வினையாகவோ விசாரித்த அந்த ஷேமலாப விசாரிப்பின் எதிரொலி அவளது உடல் முழுவதுமே எதிரொலித்தது. கண்களை மூடிக் கொண்டே இதயத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள்; வேர்வை வழிந்து கொண்டே இருந்தது.

கண்களைத் திறந்தாள்.