பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

வரையிலும் ஏற்படாதது அதிசயம்தான்! அதிசயம் என்ன அதிசயம்?... மனத்துக்கு மனம்தான் சாட்சியாகும்! எங்களோட கதையும் அப்படித்தான்!’ - எதிர்ப்புறத்துச் சுவரில் அழகு கொட்டிக் கொண்டிருந்த நாடிக் குழலைப் பெருமையோடு பார்த்துப் பெருமையோடு சிரித்தவளாக நடை தொடர்ந்தாள் ரேவதி. வெள்ளைக்கல் மூக்குத்தி பளீர் என்றது.

தொலைக்காட்சிப் பெட்டி அன்புடன் அழைக்கிறது.

“நேரமில்லை.”

‘வீடியோ’ ஆர்வத்தோடு கூப்பிட்டது. அமர்த்தலாக, “இப்போ என்னால் வரமுடியாது!” என்கிற பாவனையில் தலையைக் கிழக்கு மேற்காக அசைத்து விட்டு நடையைத் தொடர்ந்தாள், ரேவதி.

அந்தி நேரத்துச் செய்திகளில் சூடு இன்னமும் ஆறாமல் இருக்கலாம்.

“சமதர்ம சமுதாயம் உருவாக, பாரதத் தாயின் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு உன்னத இந்தியாவை உருவாக்குவோம்!”

குடியரசுத் தலைவரின் 38-வது குடியரசு விழாச் செய்தி விரிந்தது.

விரிந்த மனத்தோடும் திறந்த மனத்தோடும் செய்தியில் ஒன்றினாள், ரேவதி. ஓர் அரைக்கணம் கண்களை மூடினாள்; மூடிக் கொண்டாள்! புதிய பாரதத்தில், புதிதான பாரத சமுதாயம் அழகாகவே தரிசனம் தந்தது. கண்கள் மெல்ல மெல்ல திறக்கின்றன.

அங்கே ஊதுவத்தியிலே தாழம்பூவின் அழகான மணம் ஆனந்தமாக எரிந்தது.

மெய் மறக்கிறாள். ரேவதி.

“குட் ஈவினிங், மேடம்!”.

அந்தரங்கச் செயலர் ராவ் கைகளில் கொத்துக் கடிதங்களுடன் முத்துநகை தெளித்து நின்றார்!