பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


தீட்சிதர் நீட்டிய பிரசாதத் தட்டை வாங்கிக் கொண்ட ரேவதி, முழு ரூபாய்ப் பணத்தை நீட்டினாள்.

பணத்தை வாங்கிக் கொண்ட குருக்கள், மற்றொரு தேங்காய் மூடிப் பிரசாதத்தை ஞானசீலனிடம் நீட்டினார். அவனும் ஒரு ரூபாயை நீட்டவே, அவர் அதைப் பெற்றுக் கொள்ளாமல், “ஞானசீலன்! நீங்கள் எனக்குத் தர வேண்டிய அம்பது பைசாவை நம்ப ரேவதி கிட்டக் கொடுத்திருங்கோ; என்னோட கணக்கும் சரியாயிடும்; உங்கள் கணக்கும் தீர்ந்துடும்” என்றார். “என்னம்மா ரேவதி, சரிதானே?” என்று ரேவதியையும் கேட்டார்.

ஞானசீலனைப் போலவே, ரேவதியும் “ஊம்” கொட்டித் தலையை ஆட்டி வைத்தாள்.

அவள் பிராகாரம் சுற்றத் தொடங்கினாள்.

அவனும் தொடர்ந்தான்; பின்தொடர்ந்தான்.

மூன்று முறை பிராகாரம் சுற்றி முடிந்ததும், இருவரும் வெளி மண்டபத்திற்கு வந்து எதிரும் புதிருமாக வாய் மூடி ஊமைகளாக ஒரு வினாடி நின்றார்கள்.

“டாக்டர் ரேவதி, ஒரு நிமிடம் இருங்க. சில்லறை மாற்றிக்கிணு வந்திடறேன்” என்று தயவான குழைவோடு சொன்னான், ஞானசீலன்.

“ஆகட்டும்” என்கிற பாவனையில் வெகு அமர்த்தலாகத் தலையை லேசாக அசைத்தபடி நின்றாள், ரேவதி.

சில்லறைக் காசோடு திரும்பி வந்தான், ஞானசீலன்.

அந்தி மழையும் வந்தது.

“இந்தாங்க” என்று கூறி, ஐம்பது காசை நீட்டினான், அவன்.

அவள் தயக்கம் துளியுமின்றி வாங்கிக் கொண்டாள்.