பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


அவனது களையான முகம் ஏனோ, அப்போது களை இழந்தது! “ஓர் இங்கிதம் கருதி, ஒப்புக்காகவேனும் துட்டு வேணாம்னு இந்த ரேவதிப் பொண்ணு சொல்லியிருக்கப்படாதா?” என்பதாக அவனது உள்மனம் ஆதங்கம் அடைந்திருக்க வேண்டும். மறு கணத்தில், அவன் பதறவும் நேர்ந்தது. மழை பெய்கிறது என்கிற நினைவு இல்லாமல் நடக்கிறாளே, இந்த குமரிப் பெண்? “ரேவதி!... மிஸ் ரேவதி!”-கூப்பாடு போட்டதுதான் மிச்சம். பலன்: சுழி!

கொட்டும் மழையிலே, வெகு துடுக்காகவும், மிடுக்காகவும் தன் வழியில்-தனி வழியில் நடந்தாள்.

ஏமாற்றம் அடைந்த அழகு வாலிபன் ஞானசீலன் ஏக்கம் அடையவும் தவறவில்லை! அப்பா தனக்கென்று தனியாக வாங்கித் தந்த புது செவர்லே வண்டியில் அவள் ஏறுவாள் என்றும் அப்பொழுது அவளிடம் தன் காதல் மனத்தை வெளிப்படுத்தி விடலாம் என்றும் கோட்டை கட்டியிருந்தான், பாவம்! “போனதுதான் போனாங்க; என்கிட்ட போயிட்டு வாரேன் அப்படின்னு சொல்லிக்கிட்டுப் போயிருக்கப்படாதா? ரேவதிக்கென்று ஒரு வேடிக்கையான ஆணவமா?”

அவளை முதல் முதலாகச் சந்தித்த பொன்னான சந்தர்ப்பம் இரவு முழுவதும் அவன் உள்ளத்தில் ஆல வட்டம் சுற்றிக் கொண்டேயிருந்தது! ரேவதி மனிதப் பெண்தானா? இல்லை, மாயத் தேவதையா?...