பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

13


வயசுக்காலத்துலே தனக்கு சிச்ருஷை செய்ய பெண்டாட்டின்னு ஒருத்தி இருந்தாத்தான் ஊருக்கும், தர்மத்துக்கும்பயந்து நடப்பான்னு என்னைக்கல்யாணம் பண்ணிண்டாராம். வாய்க்கு ருசியா சமைச்சுப்போட்டேன். கம்பீரமா அவ்ளோ பெரிய வீட்டுலே மகாராணி இரும்புச்சாவிகள் குலுங்க வளையவந்தேன். நெல்லும், வாழையும் பலாவும், மாவும் கொட்டிக் கிடக்கிற வீட்டிலே நடந்து வளைய வறதே ஒரு பாக்கியமா பட்டுதுடி வெங்கு. நான் என் பொறந்தாத் துலே பாதி நாள் பட்டினியா இருந்தவ. இப்படி அஷ்டலட்சுமிகள் நர்த்தனமிடும் வீட்டிலே நான் மகாலட்சுமியா இருந்தேன். அவர் நன்னாந்தான் இருந்தார். திடும்னு உடம்புக்கு முடியாமப் போயிடுத்து "“கங்கம்மா! உன் மாதிரி ஒரு திட வைராக்கிய சாலியை நான் பார்த்ததில்லை. சரீர சுகம்தான் பிரதானம் ஏன் அது இயற்கையானதும் கூட என்று நினைக்கிற பால்ய வயசு உனக்கு. அந்த ஆசைகளை பொசிக்கிண்டு ஆறேழு வருஷமா நீ நெறஞ்ச மனசோட எங்கிட்டே இருக்கியேன்னு” அழுதார். வேண்டிய பணம் காசு இருக்கு இஷ்டபடி இருக்கலாம்"ன்னு வேற சொல்லிட்டுப்ப்போனார்.

ரயில் ஏதோ ஒரு ஜங்ஷனில் நின்றது. மேலே பலகையில் படுத்திருந்த பையனை கங்கம்மா எழுப்பினாள். பையன் பூஞ்சையாக இருந்தான். “போயி, நாலு பொட்டலமும், காப்பியும் வாங்கிண்டுவாடா...” என்று வெள்ளிக்கூஜாவைக் கொடுத்து அனுப்பினாள். “என் தம்பி... எங்கம்மா அப்பாவுக்கு நான் மூத்தவ. இவன் கடைசி. இவன் பொறக்கறத்துக்கு முன்னடியே நீ ஊரை விட்டுப்போயிட்டே.”

“படிக்கிறானா?”

“ஏதோ படிச்சான். சிலபேருக்கு எங்கே படிப்பு ஏர்றது, என்னோட துணையா இருக்கான். என் சொத்தையெல்லாம் யார் ஆளப்போறா, அவனுக்குத்தானே?...”


வெங்குலட்சுமி சிந்தனை வயப்பட்டிருந்தாள்.

சினிமா பாஸ் கொடுத்து அவளை வளைக்கப்பார்க்கும் சாயிராம். எதிர் வீட்டு காலேஜ் பையன் வீசும் கண் வீச்சு. கல்யாணமான பக்கத்து வீட்டுக்காரர் அடியே “நர்மதா! இங்கு சித்தே வந்துட்டுப்போயேன். மாமி ஒண்டியா அடுப்படியிலே கஷ்டப்படறா பாரு. தொட்டில்லே குழந்தை கிடந்து கத்துறது பாரு” என்று விடுக்கும் அழைப்பு. அவர் மனைவிக்குத்தெரியாமல் வாங்கி வந்து கொடுக்கும் மல்லிகைப்பந்து.