உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அவள் விழித்திருந்தாள்

மனசுக்குப் போதையை ஊட்டும் எல்லாமே அந்த அறையில் இருந்தன. ஜன்னல் பக்கமாக வைத்திருந்த கண்ணாடியில் பிறைச்சந்திரன் தெரிந்தது.

அவள் வெகுநேரம் நின்றிருந்தாள். பட்டப்பா ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். நர்மதா மெதுவாக அவன் அருகில் வந்து நின்றாள். பாலை எடுத்து அவனிடம் கொடுத்தாள். பூரணிதான் காலையிலிருந்து “முதலில் பாலைத் தரவேண்டும்” என்று படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறாளே.

பாலை வாங்கி மேஜை மீது வைத்துவிட்டான் அவன். ஒரு வேளை உடம்பு சரியில்லையோ?

“உடம்பு சரியில்லையா? களைப்பா இருக்கா” என்று அவன் நெற்றியில் கை வைத்துப்பர்ர்த்தாள் அவள். அந்த ஸ்பரிசம் கொஞ்சமும் அவன் உடலிலோ, உள்ளத்திலோ சிலிர்ப்பை ஏற்படுத்தவில்லை.

நர்மதா அலுப்புடன் ஜன்னல் திரையை விலக்கிவிட்டு அடுத்த வீட்டு மாடியைப் பார்த்தாள். திறந்த மாடியில் பூரணியும், பாலுவும் உட்கார்ந்திருந்தார்கள். பாலுவின் மடியில் அவள் படுத்துக்கிடந்தாள். அந்த நெருக்கம் தரும் சுகத்தில் அவன் மயங்கிக்கிடந்தாள்.

“சே! என்ன வந்தது இந்த மனுஷனுக்கு?”

அவன் திரும்பிப் பார்த்தபோது, நர்மதாவும் அவனைப் பார்த்தாள். இருவர் பார்வைகளும் மோதின. அவன் தன் பூனைக் கண்களால் அவளை ஊடுருவிப் பார்த்தான்.

“சரிதான், கல்யாணத்தன்றே அவள் மன்னி உன் ஆத்துக்காரருக்குப் பூனைக்கண்ணுடி. ராத்திரியிலே பார்த்து பயத்துக்கப் போறே, நீ பார்க்கலைன்னு கேட்டது” சரியாகத்தான் இருக்கு. இனிமே கண்களை மாத்தமுடியுமா? எப்படியோ இருந்துட்டுப்போகட்டும். அன்பா இருந்தாச்சரி

அவள் சிரித்தபடி அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பால் கிண்ணத்தை அவனிடம் கொடுத்தபடி, “ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க. எனக்கு இந்த வீடு ரொம்ப புடிச்சிருக்கு. பெரிசா, அழகாருக்கு. ஒண்டுக் குடித்தனத்துலே இருந்து அலுத்துப்போச்சு” என்று பேச ஆரம்பித்தாள்.