பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

23

“சமத்தா எல்லாக் காரியமும் செய்யறே. உங்கம்மா நன்னா காரியம் செய்வா, நன்னா சமைப்பா. ஊறுகாய் போடுவா”

திரும்பக் திரும்ப சமையலும், சாப்பாடும் பற்றியபேச்சு அவளுக்கு அலுப்பை தந்தது. எழுந்து வெளியே வந்தாள். பட்டப்பா குளித்துவிட்டு வந்தான். பளிச்சென்று நெற்றியில் சந்தனப் பொட்டுடன் சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணினான்.

“நீ குளிக்கலை”

“இல்லை”

“என்னடா இப்போ குளிக்க அவசரம்?” என்று சொல்லி கங்கம்மா நர்மதாவுக்குப் பரிந்து பேசினாள்.

நர்மதா குளிக்கப்புறப்பட்டாள். குளியளறைக்கதவைச் சாத்திக்கொண்டு இடுப்பில் இருந்த கடிதத்தை எடுத்தாள். மேலே இரண்டு குருவிகள் சல்லாபம் புரிந்து கொண்டிருந்தன பெண்குருவி நொடிக் கொருதரம் தன் உடம்பைக் கோதிக் கோதி அழகுபடுத்திக்கொண்டு தலையைச் சாய்த்து ஆண் குருவியை கீச் கீச்' என்று அழைத்தது.ஆண் குருவி வேகமாக கூடு கட்ட வைக்கோலைத் தூக்கிக்கொண்டு பறந்து வந்தது.

“கீச் கீச்” என்று பெண் குருவி கத்தியது. கூடு கட்டுவதற்காக வைக்கும் புல்லும், வைக்கோலும் கீழே உதிர்ந்து கெர்ண்டிருந்தன. “அழகா இருக்கே நீங்க கூடு கட்டற லட்சணம். இந்த லட்சணத்தில் காதல் வேறே” என்று அது “கீச் கீச்” என்று கத்தியது.

ஆண் குருவியும் பலத்த சத்தத்துடன் “கீச் கீச்” என்று கத்தித்து.

“ரொம்பத்தான் துள்ளாதே. உட்காந்த இடத்துலே என்ன அதிகாரம் வேண்டி இருக்கு. காதலியாச்சேன்னு பார்க்கிறேன். இல்லைனா தொலைச்சுப்புடுவேன்.”

பிறகு இரண்டும் சல்லாபிக்க ஆரம்பித்தன. நர்மதா வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். பெண் குருவியே ரொம்பதுணிச்சலாக நடந்து கொண்டது. அதுவே வலுவில் போய் ஆண் குருவியைச் சீண்டியது. பிறகு இரண்டும் பறந்து போயின.