சரோஜா ராமமூர்த்தி
35
“இருட்டில் தன்னைப்பரிவுடன் தொட்ட அந்தக்கை பாலுவினுடையதா? என்ன தைரியம் இருந்தால் இப்படித்தொட முடியும்? தொட்டா என்ன? எத்தனை நாளைக்கு இப்படி கருகிண்டு இருக்கிறது? அந்த சாயிராமே தேவலை. அவர் பேச்சைக் கேட்டுண்டு சினிமாவிலே சேர்ந்திருந்தா எத்தனை பெரிய நடிகரெல்லாம் என்னைத் தொட்டிருப்பா...”
மறுபடியும் இருட்டு. இப்போ முதல் இரவு. வழக்கம் போல் பால் பழம். கஷ்டம் கஷ்டம். இதெல்லாம் காண்பிக்காவிட்டால் என்ன தலையா வெடித்து விடும்? பல வீடுகளில் இதெல்லாம் இப்போது கிடையாது. மனைவியை அழைத்துக் கொண்டு எங்கேயாவது கிளம்பி விடுகிறான். நர்மதர் சலித்துக்கொண்டாள். பக்கத்தில் இருந்த பெண்களும் இதை விரும்பவில்லை. “நம்பப் பெண்ணுகூட உட்காந்து சினிமா பாக்கமுடியலை இப்போ. மானம் போவுது...” என்று ரகசியக் குரலில் ஆங்காரமாகப் பேசினாள் அந்த மூதாட்டி.
முதல் இரவில் ஆரம்பித்த காட்சிகள் படிப்படியாக மனைவியைக் கொடுமைப் படுத்துவது வரையில் நீண்டன.
“என்ன கதைன்னு சினிமா எடுக்கிறான்கள்? ஒண்ணு காதலும் ஊதலும், இல்லைன்னா பொம்மனாட்டி பிழியப் பிழிய அழுதுண்டு நிக்கணும். அதைப்பார்த்துட்டு நாம்பளும் அழணும். ஆதியிலே சீதை, திரெளபதி அழுதது போறலை. இன்னி வரைக்கும் நாமும் அழணும்னே கதை எழுதி படம் எடுக்கிறாங்க...” மூதாட்டியே பேசினாள்.
பாலுவுக்குப் படத்தைவிட நர்மதாவே சுவாரஸ்யமாக இருந்தாள்.
அவள் தலையிலிருந்து சட்டு மல்லிகை கும்மென்று மணத்தது. “பட்டப்பா! உம் பெண்டாட்டி ரொம்ப அழகுடா” என்றான், அவனை ரகசியமாகக் கிள்ளியபடி.
“அப்படியா?”
“அப்ப உனக்கு ஒண்ணும் தெரியலையா? ஆறு மாசத்துக்குமேலா அவளோட குடித்தனம் நடத்தறே. இந்த மாதிரி அழகு தெய்வத்தைக் கீழே நடக்கவே விடக்கூடாதுடா. கையிலே வச்சுண்டு தாங்கணும்...”
“அவகிட்டே நான் ஆசையாதான் இருக்கேன்”