சரோஜா ராமமூர்த்தி
37
நர்மதா கணவனுக்குப் பரிமாறினாள். நீயும் “என்கூடவே உக்காந்துரு” என்று அவளை வற்புறுத்தி தன் பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டான்.
“உனக்கு நல்ல புடவையா நாலு வாங்கலாம்னு பார்க்கிறேன். காஞ்சீபுரம் போய் பட்டுப் புடவைகளா வாங்கலாமா, இல்லை இங்கேயே வாங்கவா” என்று கேட்டான் பட்டப்பா.
“எனக்குப் புடவை வேண்டாம்.”
“ஏன்?”
“இருக்கிற புடவைகளே பீரோவிலே மக்கிண்டு இருக்கு.மேலே மேலே வாங்கி மக்க வைக்கணுமா?”
பட்டப்பா அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அளவற்ற சோகம், ஏமாற்றம் அந்த முகத்தில் அப்பிக் கிடந்தது. “இப்படியெல்லாம் என்னை ஏமாற்றமுடியாது. இனிமேல் இந்த உலகத்திலே நான் ஏமாறுவதற்கு என்ன இருக்கு? புடவையும், நகையும், வேளாவேளைக்குச் சோறும் வாழ்கையில் நிறைவைத் தந்து விடாது.”
நர்மதா கண்கலங்கியபடி எழுந்து விட்டாள்; பாதிச் சாப்பாட்டிலேயே.
“சாப்பிடு நர்மதா...ப்ளிஸ்.உக்காரு. தெரியாமக் கேட்டுட்டேன். உனக்கும் பசிக்கும் நர்மதா. ராத்திரி தூக்கமே வராது...”
அவளுக்குக்கோபம் வந்தது. பரபரவென்று எல்லாவற்றையும் எடுத்து மூடி வைத்தாள். சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணியப்பாலை மட்டும் சாப்பிட்டாள். அதில் கொஞ்சம் மீற்றி அவனிடம் கொடுத்தாள்.
“நீ சரியாச் சாப்பிடவில்லையே. பாலையாவது சாப்பிடேன்”
இப்போது இருவரும் படுக்கை அறைக்குள் இருந்தார்கள். “பகவானின் பிரசாதம் சாப்பிட்டாலாவது என்னுடைய தகிப்பு அடங்குமோன்னு பார்க்கிறேன்”
பட்டப்பா விக்கித்துப்போய் நின்றான்.
அவனுக்குப் புரிந்தது.