உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

41

“இந்த அனுபவங்களை அயலானோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்... சே... என்ன கேவலமான புத்தி...” “ என்ன ஒண்ணும் பேசமாட்டேங்கறே? பெரிய பணக்காரியாயிட்டே. அப்படியே தகதகன்னு ஜொலிக்கறே. முன்னே மாத்திரம் என்ன? கொத்திண்டு பேர்ற லட்சணம். அடிச்சான் ப்ரைஸ்...”

“நீங்க வெளியே போங்க” என்று சுட்டு விரலை உயர்த்தி அவனுக்கு வாசலைக் காண்பித்து விடலாம். ஆனால், எதுக்கு இந்த அல்பனேட வியவகாரம்? என்று பேசாமல் இருந்தாள்.

“என்ன, வந்ததும் வராததுமா உன் புருஷன் கிளம்பிட்டார்?”

“அவருக்கு ஊரிலே எத்தனையோ ஜோலி...”

“உன்னை விட்டுட்டு”

நர்மதாவுக்கு அதற்கு மேல் கேட்கப்பிடிக்கவில்லை.

“அம்மா! கடைத்தெருவுக்குப் போகனும்னியே”

“அப்ப நான் வரென்” என்றபடி சாயிராம் எழுந்தான். “உன்னை மறக்கலேடி நான்” என்று கருவிக்கொண்டு போகிறமாதிரி அவளே ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டே வெளியேறினான்.

வெங்குலட்சுமி அவள் சமைக்கிற வீட்டுக்குக் கிளம்பிச் சென்றாள்.

“இந்த உடம்பைப் பார்க்க எத்தனைபேருக்கு ஆசை? இங்கே சாயிராம். அங்கே பாலு. நடுவிலே தாலிகட்டிய கணவன் ஒன்றுக்கும் உதவாதவன்... ஆண்கள் மீதே பழி தீர்த்துக் கொள்ளலாமா? அவர்களை அணு அணுவாக வதைக்கலாமா? ஆசை காட்டி ஏமாற்றலாமா?” மனம் ரொம்பவும் விகாரப்பட்டுப் போயிற்று.

சாயிராமோ, பாலுவோ யாரோடாவது சிநேகிதமாக இருந்து ஒரு பிள்ளையைப் பெற்று கங்கம்மாவிடம் “இந்தாங்கோ உங்க மருமான்...” என்று மடியிலே போட்டு டலாமா? “இந்தாம்மா உன் பேரன்” என்று அம்மாவின் மடியில் போடலாமா? தம்பி பிள்ளைன்னு அந்த அம்மாள் ரோட்டிட்டு சாகட்டுமே பெண் ஒழுங்காகப் பெத்தது என்று இந்த அம்மா சீராட்டிப் பாராட்டட்டுமே.