பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அவள் விழித்திருந்தாள்

அவள் பாரதம் படித்திருக்கிறாள். “இப்படியும் உண்டா? எப்படி இதை ஒத்துக்கொண்டார்கள்?” என்று நினைத்துப் பார்த்திருக்கிறாள். அந்தப்பெண்களுக்கு ஏற்பட்ட துர்பாக்கியத்துக்கு விடிவு மோட்சம் இருந்தது அவர்களையும் ஏசகிறவர்கள் ஏசினார்கள். போற்றினவர்கள் போற்றினார்கள்.

இன்னும் கொஞ்ச நாழி மனசை இப்படி அலையவிட்டால் தானே போய் வலுவில் சாயிராமிடம் சரண் அடைந்த விடுவோம் என்று அவளுக்குத்தோன்றியது. அம்மாவுக்குத்தெரிந்தால் கன்னம் கன்னம் என்று அறைந்து கொள்வாள். “அடி தட்டுவாணிச் சிறுக்கி! உனக்குப் பழைய புத்தி போகலைடி. பணக்காரனா, சாயிராமவிட சின்னவனா புருஷன் கிடைச்சும் உன் ஈனபுத்தி போகலையே.. என்று மோதிக்கொள்வாள்.”

“தேடினியே அழகான மாப்பிள்ளையை. பிணத்தைக் கொண்டுபோய் உடைப்பிலே போடு...” அதுக்கு மேல் என்ன சொல்லமுடியும்?

நர்மதா வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணைய் எடுத்துக்கொண்டு கோவிலுக்குக் கிளம்பினாள்.

நேராக அம்பாள் சன்னிதிக்குப் போனாள். எந்தக்கஷ்டமும். குறையும் அம்மாவிடம் சொன்னால் தீர்ந்து போகும். பளு குறைந்துவிடும் என்கிற நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்கிறதில்லையா? வெறும் அம்மாக்களே குழந்தைகளுக்குப் பக்க பலமாக இருக்கிறபோது ஜகன் மாதாவாக உலகத் துக்குத் தாயாக இருக்கிறவள் எப்படிப்பட்ட காருண்ய மூர்த்தியாக இருக்க வேண்டும்?

சன்னதியில் கூட்டமில்லை. ஒற்றை முல்லைக்சரம் கழுத்தில் துவள, தங்கப்பொட்டு மின்ன, அரக்குப் பாவாடை கட்டிக்கொண்டு பரம சாந்தமாக அவள் நின்று கொண்டிருந்தாள்.

விளக்குக்கு எண்ணெய் விட்டாள். திரியைத் தூண்டி விட்டாள்.

இரண்டு மூன்று சின்னப்பையன்கள் பிள்ளையார் சன்னதியில் யாரோ உடைக்கிற சிதர்க்காயைப் பொறுக்க ஒடிக்கொண்டிருந்தார்கள். குருக்கள் தூணில் சாய்ந்தபடி யாரோடோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்.