பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

49

“சினிமாவுக்கு”

“யாரோட...?”

அவள் பேசாமல் தெருவில் நிற்கும் அவனைச் சுட்டிக் காட்டினாள்.

“உன் சின்னபுத்தி, அல்பபுத்தி உன்னை விட்டுப்போகலையே. இப்ப நீ கல்யாணம் ஆனவ. அவனுக்குத் துரோகம் பண்ணப்படாதுடி”.

“நான் யாருக்கும் ஒரு துரோகமும் பண்ணவில்லை...அவர் தான் எனக்குத் துரோகம் பண்ணியிருக்கார்”

“சொல்லுவேடி சொல்லுவே. நம்ப கெட்ட கேட்டுக்கு பணமும் காசுமா கிடைச்சான் பார். சொல்லுவே”

நர்மதா சீறினாள். “பணம், பணம் காசு, காசு! நீ சாகச்சே எல்லாத்தையும் எடுத்துண்டா போகப்போறே... இந்தா இப்பவே எடுத்துக்கோ” என்றபடி கழுத்திலிருந்த சங்கிலி, வளையல்கள் எல்லாவற்றையும் கழட்டிப்போட்டாள்.

என்னடீ இது ..? என்று மாய்ந்துபோனாள் வெங்குலட்சுமி.

“நீ பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சியே... மாசா மாசம் குளிக்கிறியான்னு வேறே கேட்டுத் தொணப்பறையே. அந்த மனுவுன ஆம்பிள்ளையே இல்லை. எனக்கு இந்த ஐன்மத்துலே குழந்தை பிறக்கவே பிறக்காது”

முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள் நர்மதா.

தெருவிளக்குகள் எரிய ஆரம்பித்தன. இனி நர்மதா சினிமாவுக்கு வரமாட்டாள் என்று நினைத்தபடி சாயிராம் கிளம்பினான்.

வெங்குலட்சுமி வாயடைத்துப்போய் உட்கார்ந்திருந்தாள்.

கங்கம்மா எப்படி ஏமாற்றிவிட்டாள் பார்த்தாயா? பணத்தையும், பவிஷையும் காட்டி!

இதைப்பற்றி யாரிடம்போய் விவாதம் பண்ணமுடியும்?

வெளியே சொல்லச் சொல்ல நர்மதாவுக்குத்தானே கெடுதலாக முடியும்?