52
அவள் விழித்திருந்தாள்
“உன் பூரணி அக்காவை ஊர்லே கொண்டுபோய் விட்டுட்டு வரேன்”
“ஏன் உடம்பு சரியில்லையா?”
“அவ ரொம்ப மாறிப்போயிட்டா. எப்பப்பாத்தாலும் படுக்கைதான். கங்கம்மாவும் இந்த சமயத்திலே பொறந்தாத்துலே இருக்கட்டும்பா...அனுப்பேன்னு சிபாரிசு பண்ணவே அழைச்சுண்டு போனேன்.”
வண்டியின் ஆட்டத்தில் இருவரும் நெருங்கவே ஆரம்பித்தார்கள். நர்மதாவின் மேலிருந்து லேசான மணம் கமழ்ந்தது. புடவைத்தலைப்பு அவன்மேல் உரசியது. இன்னொரு ஆளும் இருக்கிற இடத்தில் உட்கார வரவே, மூன்று பேர்கள் உட்காரகிற சீட் ஆனதால் பாலு மேலும் நெருங்கி உட்கார்ந்தான். அவள் உடம்பில் ஏற்படும் சிலிர்ப்பையும் உணர்ந்தான்.
இருவரும் இறங்கி ஏதோ ஒர் ஊரில் ஹோட்டலில் காப்பி சாப்பிட்டார்கள். அவள் பஸ்ஸில் ஏற அவன் கீழே நின்று அவளைப் பார்த்தபடி சிகரெட் பிடித்தான்.
மனசிலே ஏகப்பட்ட உளைச்சல். இப்படியே இரண்டு பேரும் எங்கேயாவது போய்விடலாமா? இந்த நிமிஷ்த்திலே நினைக்கிறதும், வாழ்கிறதும்தான் நிஜம் மற்றத்தெல்லாம் பொய். நர்மதாவும் புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பஸ்ஸில் ஒட்டுநர் வந்து உட்கார்ந்ததும் பாலு உள்ளே வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
“ஊருக்குப்போய் ரொம்ப நாள் இல்லே போல இருக்கே? ‘போர்’ அடிச்சுதா? பட்டப்பாவை விட்டுட்டு இருக்க முடியலே இல்லே...”
அவன் ஆழம் பார்க்கிறான் என்பது இவளுக்குப்புரிந்தது.
“அதெல்லாம் ஒண்னும் இல்லை. அங்கே இருக்கப் பிடிக்கலே. பூரணி அக்கா மாதிரி எனக்கு யாரும் பேச்சுத் துணைக்குக் கூட இல்லை...”
“முன்னே கல்யாணத்துக்கு முன்னே யார் இருந்தார்கள்?”
“சாயிராம்னு ஒருத்தர் வருவார். இப்ப அவர் வந்தா எங்கம்மாவுக்குப் பிடிக்கலை”