பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அவள் விழித்திருந்தாள்

“உங்களை இங்கே வரச்சொல்லி யார் கூப்பிட்டது?”

“உன்னைப் பாக்கணும்னு ஆசையா இருந்தது நர்மதா, எப்பப்பாத்தாலும் ஒன் நெனப்புத்தான் எனக்கு-”

அவள் சூள் கொட்டினாள். கைகளைத் தூக்கி நெட்டி முறித்தாள்.

“பாத்தாச்சோல்லியோ? போங்களேன்-”

பட்டப்பா அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். மேஜை மீது வைத்திருந்த பூவையும், பொட்டலங்களையும் எடுத்து வந்து, “இந்தா! இதை வாங்கிக்கோ. பூ வைச்சுக்கோ. நீ தலை நெறய பூ வச்சுண்டா ஜம்முன்னு இருக்கு, நாம ரெண்டு பேருமாவே டிபன் சாப்பிடலாம். இன்னிக்கி புதுப்படம் ரிலீஸ். உன் அண்ணாவும் மன்னியும் போயிருப்பான்னுதான் தைரியமா வந்திருக்கேன்-”

நர்மதா பரிதாபமாக அவனைப்பார்த்தாள். ஒட்டிப் போயிருக்கும் கன்னங்கள். சோகை வெளுப்பாக ஓர் அசட்டு வெளுப்பு, பூனைக்கண்கள். மழ மழவென்ற முகம். வளைந்த மூக்கு. செம்பட்டை பறக்கும் கிராப்பு வேற. ஆண்மையின் கம்பீரம் லவ லேசமும் இல்லாமல் ஆணாகப் பிறந்து விட்டிருந்தான் அவன். தொள தொளவென்ற ஷர்ட்டும், தெருவைப் பெருக்குகிற வேஷ்டியும் கட்டியிருந்தான்.

அவன் அவளுக்கு அருகில் நெருங்கி வந்து நின்றான். மேலும் சென்டின் மணம் குபீரென்றுவீசியது. அவள் நகர்ந்து நின்றாள். “எதுக்கு இப்படி நாட்டுப் புறத்தான் மாதிரி செண்டை ஊத்திண்டு வரேள்? சாராய நெடியே தேவலாம் போல இருக்கு-”,

“அப்ப நாளைலேருந்து குடிச்சிட்டு வாங்கறயா?”

“உக்கும்...இதுக் கொண்னும் கொறச்சல் இல்லை-”

அவனுக்கு ஆசை அடித்துக்கொண்டது. அவளைத்தொட்டுப்பார்க்க வேண்டும். அந்த நீண்ட பின்னலை வருட வேண்டும். கொழு கொழு வென்றிருக்கும் கன்னங்களை வருட வேண்டும்.

அவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். கோவிலிலிருந்து நாதஸ்வர ஒலி கேட்டது.