பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜாராமமூர்த்தி

55

கேளுன்னு சொல்லேன், பயந்து சாகறியே என்று வெடித்தான்.

அப்போதும் நர்மதர் பேசாமல் இருக்கவே,“பொம்மனாட்டிகளுக்கு இருக்கிற நெஞ்சாழம் எங்களுக்குக் கிடையாது. நல்ல ஜன்மங்கள்!” என்று சொல்லிவிட்டுப்போனான்.

நர்மதா வேதனைப்பட்டாள். பூரணியிடம் அந்தரங்கமாக நம்பிக்கையுடன் இந்த ரகசியத்தைச் சொல்லிக்கொண்டது வினையாகப்போயிற்றே என்று நினைத்தாள். அதனால்தான். பாலு பஸ்ஸில் மிக உரிமையோடு பக்கத்தில் நெருக்கமாக உட்காரும் அளவுக்கு துணிச்சலும் பெற்றான் என்பதும் தெரிந்து போயிற்று. தன்னுடைய கணவனும் அவனிடம் போய் தன் குறையை, இயலாமையைச் சொல்லியிருக்கிறான் என்று இவளுக்குத்தெரியாது.

படுக்கை உள் அலமாரி பூராவும் பஸ்பங்களும், லேகியங்களும் அடுக்கி வைத்திருந்தது. பட்டப்பா காலையில், பகலில் இரவில் என்று எதையாவது (மருந்து) சாப்பிட்டுக் கொண்டி ருந்தான். வாதாம்பருப்பை அரைத்து பாலில் கரைத்துக் குடித்தான். உடம்பு தள தளன்னு ஆயிற்று

அன்றும் அதிகாலையில் ஒரு வைத்தியரைப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டு வெளியே போயிருந்தான். கிணற்றங்கரை பாரிஜாதம் பொல்லென்று பூத்துக் கொட்டியிருந்தது. ராத்திரி முழுக்கப் பெய்த மழையால் மழை நீர் சொட்டிக்கொண்டிருந்த்து.

டம்ளரில் காப்பி கொண்டுவந்து நர்மதாவுக்குச் சற்று தொலைவில் வைத்தாள் கங்கம்மா.

“சொல்றேன்னு கோவிச்சுக்காதே. இந்த நாள்ளே கல்யாணம் ஆன சுருக்கில் குழந்தை பிறந்துடனும். இல்லேன்னு ஆன அப்புறமா பிறக்கறதேயில்லை. அதான் எனக்கு வேதனையா இருக்கு. உன் வயித்துலே ஒண்ணு பிறந்து பாத்துட்டேன்னா போறும்.”

அவளுடைய ஆசை நியாயமானது என்று அவளுக்குப் பட்டது. காப்பியை எடுத்துக்குடித்தாள். பக்கத்து வீட்டில் கிணற்றடியிலேயே பாலு குளித்துக் கொண்டிருந்தான். பாட்டு வேறே கேட்டது. திரும்பிப் பார்த்தாள். கரணையாய் அந்தக் கைகளும், ரோமம் அடர்ந்த மார்பும், நீண்டகால்களும் நர்மதாவுக்கு ஏதோஒரு வேகம் ஏற்பட்டது.