பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

59

“அப்பனே! நீயும் சேர்ந்துதானே என்னை ஏமாத்தி இருக்கே”

உள்ளே பட்டப்பாவின் முகம் வாடிக்கிடந்தது.

“இந்தாங்க பால் சாப்பிடுங்கோ”

“நீ”

“நான் சாப்பிடக்கூடாது. இனிமே அதைத் தொடக்கூட எனக்கு அருகதை இல்லை”

அவன் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தான்.

“எனக்கு உன் மேலே கோபமே இல்லை. நீ ப்ரீயா இருந்திருக்கலாம். எத்தனை நாளைக்குதான் உன்னையே நீ எரிச்சுக்க முடியும். காமம் தீ போன்றது. அது அணு அணுவாக உன்னைத் தின்று விடுமே...”

அவள் மிகுந்த வியப்புடன் அவனைப்பார்த்தாள். ஆண்களிடம் ஆயிரம் குறைகள் இருந்தாலும் பெண்கள் கற்புள்ளவர்களாய், தங்கள் உணர்ச்சிகளை அழித்துக்கொண்டு சன்னியாசிகளாய், பவித்ரமாய், கண்ணகியாய் இருக்க வேண்டும் என்கிற நியாயம் கற்பிக்கப்பட்டு செயல் முறையில் பல ஓட்டை உடைசலோடு செயல்பட்டு வரும் இந்த நாட்களிலே இப்படி ஒரு மனுஷனா?

“நான் பலவீனப்பட்டுப்போனேன். என்னை ஒரு மயக்க நிலை ஆட்கொண்டிருந்தது. நான் ஒரு தப்பும் பண்ணலை. அவருடைய ஸ்பரிசம் ஒன்றைத்தான் அனுபவித்தேன்”

பட்டப்பா ஆதுரத்துடன் அவளைப்பற்றி தன் அருகில் அமர்த்திக்கொண்டான்.

“இப்ப ஒண்ணு சொல்றேன் கேப்பியா?”

““உம் சொல்லுங்கோ”

நீ இங்கே இருக்கச்சே பாலுவோட சிநேகமா இருக்கலாம். ஊருக்குப்போனா சாயிராமோடு சிநேகமா இருக்கலாம். நான் உன்னை ஏமாத்தினதுக்கு இதுதான் பரிஹாரம். இதனாலே பிரளயமோ. பூகம்பமோ, ஊழிக்காற்றோ வந்துடாது. எல்லாம் அனுபவிக்கிறவாளே இப்படி அப்படி இருக்கிறதா கேள்விப்படறேன். நீ வந்து...”