பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

61

11

இப்போது கங்கம்மாவின் மனசில் நிராசை நிரம்பி விட்டது. பூர்ணி பிரசவித்து அழகான ஆண் குழந்தையோடு கணவனிடம் வந்து சேர்ந்தாள். பெருமை முகத்தில் கொப்பளிக்க அவள் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு அடிக்கடி நர்மதாவைத்து தேடி வருவாள். குழந்தையும் நர்மதாவிடம் ஒட்டிக்கொண்டது.

வழக்கம்போல அந்த மாசத்தில் நர்மதா வெளியில் உட்கார்ந்தவுடன் கங்கம்மா வெடித்துச் சீறினாள்.

“கர்மம்...கர்மம்! என்னிக்கி என்னுடைய ஆசை விடியப் போறது? உக்காந்தாச்சா? உடனொத்தவள் திரும்பவும் குளிக்காம இருக்கா. குழந்தைக்கு ஏழெட்டு மாசம் கூட ஆகலை. பூக்கிறதுதான் பூக்கும். காய்க்கிறதுதான் காய்க்கும். "எட்டி பழுத்தா என்ன ங்கற மாதிரி தள தளன்னு இருத்துட்டா போதுமா? வயத்துலே ஒரு பூச்சி பொட்டு உண்டாகலை.”

பட்டப்பா ரொம்பவும் வேதனைப்பட்டான். காரணமில்லாமல் மனைவி ஏச்சு கேட்கிறாளே என்று வருந்தினான்.

அன்று அவனுக்குச் சாப்பாடு போட்டுக்கொண்டே, “நான் சொல்றேன்னு நெனக்காதே. இவ இனிமே உண்டாவான்னு எனக்கு நம்பிக்கை போயிடுத்து. வேறே நல்ல பொண்ணா பார்க்கிறேன்”

நர்மதா கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ஆமாண்டா! பொண் அழகிலே கொறச்சலா இருந்தாலும் வயிறு திறந்து இரண்டு பெத்தாப்போறும். நான் தான் இப்படி நின்னுட்டேன். நீயும் இப்படி நிக்கமுடியுமா?”