பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அவள் விழித்திருந்தாள்

பட்டப்பா சாதத்தை அளைந்து கொண்டு உட்கார்ந்திருந்தான்.

“என்ன சொல்றே? அவ அழகிலே, உடம்பிலே மயங்கிக் கிடக்கிறே. என்ன பிரயோஜனம்? பேர் சொல்ல ஒண்ணு இல்லே..”

நர்மதா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அடுத்த வீட்டுக்காரனோட சிநேகமாயிரு. ஊரிலே இருக்கிறவனோட எப்படி வேணா இரு இல்லைன்ன எங்கக்கா எனக்கு இரண்டாந்தரம் கட்ட ஆரம்பிப்பான்னு முழங்கின வீரதீரப்பரதாபன் வாயடைத்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள்.

அவள் ரேழியில் உட்கார்ந்திருந்தாள்.

“நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ. உண்மையைச் சொல்லித்தானே ஆகணும்? எத்தனை நாளைக்கு மறைச்சு வச்சு மன்னாட முடியும்? நான் நன்னாத்தான் இருக்கேன். எனக்குப் பத்து குழந்தைகள் கூடப்பொறக்கும். உங்க தம்பிதான் அதுக்குலாயகில்லை. நான் என்ன பண்ணட்டும்?”

கங்கம்மா அப்படியே நின்றவள் நின்றவள்தான். எப்போதோ சின்ன வயசில் அவள் அம்மா பட்டப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் இந்த பையன் பெரியனாகிக் குழந்தை குட்டி பெத்தால்தான் இவனை ஆம்பளைன்னு ஒத்துக்கமுடியும் என்று சொல்லிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அம்மா எப்படியோ கண்டுபிடித்திருக்கிறாள். அக்கா இதையெல்லாம் புரிந்துகொள்ளுமுன் பட்டப்பாவும் வளர்ந்து விட்டான்.

பட்டப்பா பாதி சாப்பாட்டில் எமுந்து விட்டான். அவன் நன்றியோடு நர்மதாவைப் பார்த்தான். மனம் லேசாகி விட்டதை உணர்ந்தான். மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை எத்தனை லாவகமாக இறக்கி வைத்து விட்டாள்?

கங்கம்மா ஏழுமலையான் படத்தின் முன்பு போய் நின்றாள்.

“இனிமே உனக்கு பாலும் கிடையாது ஒண்ணும் கிடையாது. கொஞ்ச பசும்பாலா, கல்கண்டா, குங்குமப்பூவா சாப்பிட்டிருக்கே? நன்ன என்னை மொட்டை அடிச்சாச்சு. உனக்கு அதுவே வழக்கமாயிடுத்து.”