பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்3



வந்த இலக்குவனைப் பார்த்து, 'நீ தீ அமைத்துக் கொடு' என்று ஏன் கேட்கிறாள் என்றால், இலக்குவன் கையால் தீ அமைத்து அதில் தான்புகுவதுதான் அவனுக்குச் செய்த தீங்குக்கு உரிய தண்டனை என்று நினைக்கிறாள். இராகவனும் அதைக் கண்சாடை மூலம் ஒத்துக் கொள்கிறான். எனவே, இலக்குவன் தீ அமைத்துக் கொடுக்கிறான்.

இது ஒரு நாடகம். பிராட்டியினுடைய மனத்திலே ஒரு நெருடல் தோன்றி, அது வாழ்நாள் முழுவதும் அவளைத் துன்புறுத்தாமல் இருக்க இராகவன் செய்த மாபெரும் நாடகம். இதில் அதைப்பற்றித் தவறாக நினைப்பதற்கு ஒன்றும் இல்லை.

2. கம்பர் மகாபாரத -கதை- கிளைக்கதை போன்று காப்பியம் இயற்றியிருந்தால் என்னவாயிருக்கும்?

கம்பனுடைய எண்ணம் என்ன என்பதை முதல் பாடலிலேயே நாம் தெரிந்துகொள்கிறோம். 9ஆம் நூற்றாண்டிலே பல்லவப் பேரரசு வீழ்ச்சி அடைந்த நிலையிலே இன்ப வேட்டையிலே மக்கள் புகுந்து விட்டார்கள். பூக்கொய் படலம், உண்டாட்டுப் படலம் என்ற இரண்டு படலங்களும் அன்றைக்குத் தமிழ்நாடு இருந்த நிலையைத் தெரிவிக்கின்றன. இப்படியே போனால் இந்த நாட்டுக்கு ஆபத்து உண்டாகிவிடும் என்று நினைத்து, புலன் அடக்கத்தை அறிவுறுத்த வேண்டுமென்று நினைத்து, அதற்காக இந்தக் கதையை ஏற்றுக்கொள்கிறான் கவிச்சக்கரவர்த்தி. பாரதத்தை எடுத்துக் கொண்டிருப் பானேயானால் இப்படிப்பட்டதொரு சூழ்நிலை உருவாகியிருக்காது. அவனுடைய கருத்து என்னவோ அதற்கு இடந்தந்தது இராம காதை. அந்த அடிப்படையில்தான் இதனை எடுத்துக்கொண்டான்.