பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



மரண தண்டனையும், மற்றொன்றிற்கு விருதும் வழங்குவது எப்படிச் சரியாகும்?

இதைப் புரிந்துகொண்டால், கோட்புலியார் செயலையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

அடுத்தபடியாக- சிறுத்தொண்டர் தம்பிள்ளையைக் கறிசமைத்தது சரியா என்ற வினாவைப் பார்ப்போம்.

கொள்கை அல்லது கடமை என்ற ஒன்றிற்காகத் தம் பிள்ளையைக் கறிசமைக்கும் சோதனை யாருக்கு ஏற்பட்டது? நம்மைப் போன்ற சாதாரண மனிதருக்கு அன்று.

பல்லவ மன்னனுக்குச் சேனாதிபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இவர் சாளுக்கியனை எதிர்த்து அவனுடைய தலைநகராகிய வாதாபி வரை சென்று ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தார் அல்லவா!

தாய்நாட்டைக் காக்கும் கடமை காரணமாக இதனைப் பரஞ்சோதி செய்தார். பல்லவ மன்னனும் அவர் செயலைப் போற்றிப் பரிசளித்து ஒய்வு தந்தார்.

நாட்டைக் காத்தல் என்ற கடமைக்காக முன்பின் தெரியாதவர்களை வெட்டி வீழ்த்துவது சரி என்று அவரும் கருதினார். உலகமும் அதனை ஏற்றுக்கொண்டது.

அடியார்கள் எது கேட்டாலும் அப்பொருள் தம்பால் இருப்பின் அதனை மறுக்காமல் கொடுப்பது தம் கடமை. தம் கொள்கை என்ற முடிவில் வாழ்ந்தவர் பரஞ்சோதியார். எனவே நாட்டுப்பற்று என்ற கொள்கைக்காகப் பிறரைப் பலியிடுவது போல், தம் கொள்கையைக் காப்பாற்றுவதற்காகத் தம் மகனை அவர் பலியிடத் தயாராக இருப்பாரா என்பதுதான் வினா.