பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்21



17. மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் தசரதன். பிள்ளைகளில் இராமனையே பெரிதும் விரும்பினான். இது அவனது குறை அல்லவா? மற்றப் புதல்வர்களிடம் அவன் என்ன குறை கண்டான்?

இதற்குத் தசரதன்தான் விடை சொல்ல முடியும். நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. அவன் பெருந் தவறுதான் செய்தான். இராமனைத் தவிர வேறு பிள்ளைகள் தனக்கு இருப்பதாக அவன் நினைவில் கொள்ளவில்லை. இதற்கு அரணாக நானும் ஒர் இடத்தைக் காட்ட முடியும்.

வந்த விசுவாமித்திரன் நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி என்றுதான் சொன்னான். இராமன் என்று சொல்லவில்லை. கரிய செம்மல் என்று அடையாளம் சொன்னான். இரண்டு பிள்ளை சிவப்பு - இரண்டு பிள்ளை கறுப்பு. கரிய செம்மல் என்று சொன்னவுடன் ஏன் பரதன் நினைப்பு இவனுக்கு வரவில்லை?

ஆக, இராமனைத் தவிர இவனுக்கு வேறே தியானமே கிடையாது. அந்தக் குறைதான் அவனைச் சாக அடித்தது. வேறு ஒன்றுமில்லை. இராமன் பிரிவு அல்ல. நான்கு பிள்ளைகளைப் பெற்றும் ஒரு மகனிடத்திலே அளவுக்கு மீறி அன்பு காட்டினானே, அதுதான் அவனுடைய குறைக்குக் காரணமாக இருந்தது என்பதைக் கவிச்சக்கரவர்த்தி காட்டிச் செல்கிறார். ஆகவே அதை ஏற்றுக் கொள்ளலாம். -

18. சிலம்பில் ஊழ்வினையை இளங்கோவடிகள் வற்புறுத்தி யதைப் போலவே கம்பநாடனும் தன் காவியத்தில் விதியினை வலியுறுத்துகிறானா? அல்லது வேறு ஏதாவது வேறுபாடு உண்டா?