பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனிக்குறிப்பு

பேரா. அ.ச.ஞா.விடம் இலக்கியம் குறித்து வினாக்கள் எழுப்பி, அவர் தந்த விடைகளைப் பதிவு செய்தது இந்த நூல்.

முன்னரே இப்படிப்பட்ட அ.ச.ஞா.வின் விடைப் பதிவுகள் வெளியாகியுள்ளன. ‘இன்றும் இனியும்’ என்பது முதலில் வெளிவந்தது. அண்மையில் ‘தொட்டனைத்து ஊறும்…’ வெளிவந்தது. இப்போது மூன்றாவதாக இந்நூல் வெளிவருகிறது.

முதல் நூலிலே பேச்சு நடை இராது; எழுத்துரை யாகவே அமைந்தது. ஆங்காங்கே மேடைப் பேச்சு நடையின் எதிரொலியை அடையாளம் காண முடியுமாயினும், முதல் நூல் எழுத்துரையாகவே அமைந்தது. ‘தொட்டனைத்து ஊறும்…’ எழுத்துரையாக இல்லாமல் பேச்சு நடையிலேயே அமைந்தது. ஆயினும் எழுத்துரையின் பாங்கு பெரிதும் இடம் பெற்றது.

இந்த நூல் எழுத்துரைப் பாங்குக்கு இடம் தரவில்லை; ஒலிநாடாவில் பதிவாகியதை ஏறத்தாழ நூற்றுக்கு நூறு அப்படியே எழுத்து வடிவில் தருகிறது. ஆங்கிலத் தொடர்களும் வாய்மொழி நடையும் கலந்து, அ.ச.ஞா.வின் சொற்பொழிவுகளைக் கேட்டவர்களுக்கு ஒரு புதுவகை விருந்தாக அமைகிறது இந்த நூல்.