பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
145


ஆண் : மல்லிகை முல்லை நறுமலரும்
மயங்கித் தவிக்கும் எனதுயிரும்
அள்ளிச் செறுகிக் கூந்தலிலே
அழகாய் முடித்த பெண் மயிலே!
துள்ளி யோடும் காவிரி நீ!-உனைச்
சொந்தம் கொள்ளும் அலைகடல் நான்!


பெண் : கள்ளம் இல்லா மனத்தாலே
கவிதை பாடும் திறத்தாலே
உள்ளம் உருகச் செய்தவரே!
உணர்வில் ஒன்றிக் கலந்தவரே!


ஆண் : துள்ளி யோடும் காவிரி நீ!
சொந்தம் கொள்ளும் அலைகடல் நான்!


ஆண் : செந்தமிழ் நாட்டின் சீருயர
வந்திடும் காவிரி நதி போலே
அந்தகன் எனது வாழ்வுயர
அன்பின் வெள்ளம் தந்தவளே!


பெண் : சிந்தனைக் கதவும் திறந்திடவே
செய்திடும் அறிவுச் சுடர் போலே
மங்கை எனது மதி மயக்கம்
மாறிடும் விந்தை புரிந்தவரே!


ஆண் : துள்ளி யோடும் காவிரி நீ!
பெண் : சொந்தம் கொள்ளும் அலைகடல் நீ!