பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அறிமுகம்

திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடக் கரையோரம் மேலக்குடிக்காடு என்னும் ஒரு சிற்றூரில் 13-2-1920-ல் பிறந்தான் ஒரு பாடலாசிரியன்.

தந்தை கிராம அதிகாரி அய்யம் பெருமாள் உடையார். தாயார் மிளகாயி அம்மாள். பரம்பரை விவசாயிகள்.

பள்ளிப் படிப்பு நான்காம் வகுப்பு வரை உள்ளூரில். பிறகு குடந்தை பாணுதுரை உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை. கேள்வி ஞானத்தால் ஒரளவு நன்றாகப் பாடக் கூடியவன். மொழி மீதும் நாடகக் கலை மீதும் பெரும் பற்றுக் கொண்டவன். ஒரு சில நாடகங்களில் நடிப்பதுண்டு. அவனுக்கு அந்த தாகத்தை அதிகமாக்கியவர், லிட்டில் ஃபிளவர் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர், காலஞ் சென்ற பாபநாசம் சிவன் அவர்களின் மூத்த சகோதரர் திரு. ராஜகோபாலய்யர் அவர்கள். ஒய்வு நேரங்களிலெல்லாம், அவனுக்கு இலக்கண இலக்கியங்களில் ஒரளவு தேர்ச்சியுறக் கற்றுத் தந்தார்.

1938-முதல் 1940 மார்ச் முடிய குடந்தை அரசினர் கல்லூரியில் "இண்ட்டர் மீடியட்" படித்தான் படித்த இரண்டு ஆண்டுகளிலும், கல்லூரியில் நாடகங்கள் தயார் செய்து நடத்தினான். அந்தக் காலத்தில் அங்கு B. A. படித்தவர்தான், நாடகங்களில் பெண் வேடங்களில் மிக அழகாக நடித்துக் காட்டிய, பிரபல எழுத்தாளரான தி. ஜானகிராமன். அவனது தமிழ் ஆர்வத்தை அதிகம் வளர்த்து விட்டவர் திரு. கோ. முத்துப்பிள்ளை அவர்கள், இன்று தமிழக அரசின் தமிழ் ஆய்வுத்துறையில் பணியாற்றி வருபவர்.

கல்லூரிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க நேர்ந்தது. காரணம் சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ள விவசாயக் குடும்-