பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
191
இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு!
இல்லையென்ற குறையும் இங்கே
இனிமேலும் ஏன் நமக்கு?
கன்னித்தாய் காவேரி எந்நாளும் துணையிருக்க!
கைகளிலே உழைப்பதற்கு பலமிருக்க திறமிருக்க!
பொன்விளையும் பூமியெனும் கண்ணான நிலமிருக்க!
புகழுடனே உலகையாண்ட இனம் என்ற பெயரிருக்க! (இ)
எண்ணத்தால் இமயம் போலே உயர்ந்து விட்ட மனமிருக்க!
லட்சியமே உயிராகக் கொண்டாடும் குணமிருக்க!
முன்னேற்றப் பாதையிலே அறிவோடு நாம் நடக்க!
கண்ணோட்டம் கொண்டவர்கள் வழிகாட்டக் காத்திருக்க! (இ)
வந்தாரை வரவேற்று வாழவைத்த தென்னாடு!
வள்ளுவனார் பொது மறையை வழங்கிய நம்நாடு!
இந்நாடு பிறர்கையை எதிர்பார்த்து வாழுவதா?
எந்நாளும் துயர்மேகம் நம்மீது குழுவதா?
தங்கரத்தினம்-1960
இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : P சுசிலா