உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



104

நித்திய பாலன்


வீட்டுக்கு வாங்கோ என்றார். அதாவது, அவர் வீட்டுக்கு விசேஷமாக வரவேண்டாமாம்.

அழுகிய பூசணிக்காயால், என் குடல் அழுகும் நிலைக்கு வந்து விட்டதால், வெட்கத்தை விரட்டி விட்டு, தற்செயலாகப் போவது போல், ஆர்.கே. புரத்து நண்பர் வீட்டைக் குறி வைத்து, பஸ் ஏறினேன். முன் எச்சரிக்கையாக, அவரிடம் பலவந்தமாக வாங்கப்பட்ட முகவரியை வைத்துக் கொண்டு தேடினேன். வீடு கிடைத்தது. வீட்டுக்காரர்கள் கிடைக்கவில்லை. 'புத்தா பார்க் போய் விட்டார்களாம். யாரும் வந்தால், வர நாழியாகும் என்று சொல்லும் படி, சொல்லி விட்டார்களாம்.

என்ன செய்வதென்று புரியாமல், கால் போன போக்கில் நடந்தேன். டில்லி தமிழ்ச் சங்கம் போர்டைப் பார்த்துவிட்டு, படியேறினேன். அங்கு பத்து பதினைந்து பேருக்கு, ஒரு பேச்சாளர், செவிக்குத்தான் உணவளித்துக் கொண்டிருந்தார். என்னை இலக்கிய அபிமானியாக நினைத்து, பதினைந்து வாடிக்கைக்காரர்களும், விழிகளில் நட்பு பாவத்தை ஏற்றியபோது, நான் ஏறிய படிகள் வழியாக இறங்கினேன்.

மீண்டும் கால் போன போக்கில் நடந்தேன். செத்தாலும் சும்மா சாகலாமே தவிர, நம்மால், மெஸ்காரரின் சப்பாத்தியைச் சாப்பிட்டுவிட்டுச் சாக முடியாது. தொந்தவர்கள் தென்படுகிறார்களா என்று நிமிர்ந்து பார்த்தேன் தென்பட்டார்கள். ஆனால் அவர்கள் சாப்பிட்டாச்சா என்று கேட்கவில்லை. அரிசிச் சோறு பற்றிப் பேசவில்லை. நானும் 'சப்பாத்தி ஒத்துக்கல. பூசணிக்காய் அழுகின பிறகுதான் சமைப்பாங்களோ என்று ஜாடை மாடையாக கேட்டேன் போகச் போகச்' சரியாகிவிடும்! என்றுதான் போக்கு காட்டினார்களே தவிர, நிஜம் சொன்ன வாய்க்கு, அரிசிச்சோறு கிடைக்கவில்லை. இந்த அளவுக்குக் கீழே பிச்சைக் காரனாக மாற, நானும் தயாராக இல்லை.