பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 123 சேர்ந்த மூன்றாவது கூட்டுப்பொருளா? காற்றுபோல், கண்ணுக்குப் புலப்படாத ஒரு பூதமா? அல்லது நெருப்பு போல் எந்த உணர்வையாவது பற்றிக்கொண்டு நிற்பதா? இமயப் பனி மலையில் நீருற்றாய் வெளிப்பட்டு, மலைமுகடுகளில் குழந்தையாய் தத்தித்தத்தி நடந்து, சமவெளியில் பிரவாகமாகவும் கங்கையைப் போல், மூளையில் உதித்து, சுரபித் திரவங்களை கிளைநதிகளாகக் கொண்டு இறுதியில் மரணக் கடலில் சங்கமிக்கும் மகாநதியா? இப்படி மனதை பல்வேறு உருவகங்களாய் பாவித்துக் கொண்ட ஏகாம்பரம், மேலும் உருவங்களைப் படைக்கப் போனார். இந்தப் படைப்பில் மனம் ஒரு விஷப்பூச்சியாக வந்தது. அப்படியே கற்பித்துக் கொண்டார். ஆனாலும் ஒரு சந்தேகம். மனம் எதிரியல்ல. அனுகூலசத்துரும் அல்ல. இரண்டு கெட்டான். இந்தவகையில் அது ஒரு பிள்ளைப் பூச்சி. இதை, பிரக்ஞை குளவியாய் கொட்டிக்கொட்டி அதனைப்போல் ஆக்க வேண்டும். ஏகாம்பரம் ஆனந்தப் பள்ளு பாடினார். இப்படிப்பட்ட அனுமானம், குருநாதருக்குக்கூட தோன்றியிருக்காது. ஏகாம்பரம், மனம் என்ற பிள்ளைப் பூச்சியை ஆசனவாயின் அடிவாரத்தில் பிரக்ஞைக் கோடுகளினால் இணைக்கச்செய்தார். கண்களில் தோன்றி இந்த பிரக்ஞை வழியாக வெளிப்பட்ட ஒளிக்கோடுகளால், மனதை கவ்விப்பிடிக்கச்செய்தார். அந்த ஒளிக்கோடுகளால், அடிவாரத்தில் கிடந்த மனதை தூக்கி நாபியில் வைத்தார். மனம் வீறிட்டுக்கத்தியது. தொலைக் காட்சிபோல் பாரடாபார் என்று அவர் முன்னால் பல்வேறு காட்சிகளை ஒளிபரப்பியது. கைவிட்ட காதலியின் துரோகமாய் வெளிப்பட்டது. கைவிடப்பட்ட காதலியின் சாபமாய் சினந்தது. அவமானப்பட்ட சங்கதிகளையும், அவமானப் படுத்தப்பட்ட நிகழ்வுகளையும், பெற்றோரை கை விட்டதையும், பிறப்பித்தவர்கள் தன்னை கைவிட்டதையும்,