பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 133 கொண்டேன். நான், நானாகி - அந்த நானே சூன்யமாகி, சூன்ய சுக்கிலத்தில் சுற்றி வரவேண்டும். நீங்கள் இந்த உலகத்தில் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய திருவண்ணாமலை, சிதம்பரம், பழனி, வடலூர், நாகூர், வேளாங்கண்ணி முதலிய தெய்வத் திருத்தலங்களைத் தரிசிப்பதற்கு உங்கள் சிபாரிசு எனக்குத் தேவையில்லை. "நீங்கள் பெரியவர்தான்; ஆனால் பரம்பொருளை விடப் பெரியவராக இருக்க முடியாது. நீங்கள் சித்தர்தான்; ஆனால் பரசித்தின் முன்னால் நீங்களும் நானும் அசித்துக்கள். உங்கள் உருவத்தின் வழியாக அந்த அரூபத்தைக் காண நினைத்தது தவறுதான். என் உருவத்தையே ஒடுக்கி, உணர்வுகளை உள்ளடக்கி, சத்யச் சிறகுகள் மூலம் பரம்பொருளை புரிந்து கொள்வேன். இது சத்தியம். சத்தியவான் தோற்கலாம்; ஆனால் சத்தியம் தோற்காது. நீங்கள் காட்டிய வித்தியாசம், உங்கள் ஞானத்திற்கே மூலனான ஆண்டவனின் அருள்பாலிப்பில் இருக்க முடியாது; நான் வருகிறேன்.' கார்த்தி எழுந்தான். சிறிது தூரம் நடந்து, சாமியாரையே வெறித்துப் பார்த்தான். அவரிடம் அவனுக்கிருந்த லவ்-கேட் எனப்படும் வெறுப்பன்பை அவன் உணர்ந்து பார்த்தான். சாமியார், பக்தர்கள் கொடுத்த வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டும், கைநிறையத் திருநீறு எடுத்து, அவர்கள் நெற்றி நிறையப் பூசிக்கொண்டும் இருந்தார். தன்னை அறியாமலே கரங் குவித்து அவரை வண்ங்கிவிட்டு, கார்த்தி திரும்பிப் பார்க்காமலே வேகமாக நடந்தான். எந்த இடைத்தரகரும் இல்லாமல் பிரபஞ்ச ரகசியத்தை அறிய முடியவில்லை என்றாலும், அணுக முடியும் என்ற சுய உபதேசம் அவனுள் உருவானது. ஆனந்த விகடன் - 1977