பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 வீட்டுக் கணக்கும்... ஆகாயக் கணக்கும். சென்னைத் தோழர் நீண்ட உரையாடலுக்குப் பிறகு, தனது பிரச்சினையை ஏதேச்சையாய் சொல்கிறார். உடனே அவர் 'நீங்க ஹெட்-ஆப் ஆபீஸ், அதாவது அலுவலகத் தலைவரா' என்கிறார். இவர், மேலும் கீழுமாய் தலையாட்டியதும் அவர், அலுவலக சாஸ்திரங்களில் ஒன்றை விளக்குகிறார். ஒரு அலுவலகத் தலைவர் தனக்கு டிரான்ஸ்பர் வரும்போது, தனக்குத்தானே முன்பணம் சாங்ஷன் செய்யலாமாம். அலுவலகம் வந்த பொன்னம்பலம் இந்த விதி தெரியாத நிர்வாக அதிகாரியைச் செல்லமாகக் கோபிக்க, அவர் பிராயச்சித்தமாய், அப்போதே பத்தாயிரம் ரூபாய்க்கு காசோலை எழுதி, இவரிடம் கையெழுத்து வாங்குகிறார். காலையில் சேங்ஷன், மாலையில் பணம். மறுநாள் பிருந்தாவன் ரயில், வெறும் ரெயிலல்ல. பிருந்தாவனத்து கிருஷ்ணனே இவரை ஏற்றி வந்தான். இந்த படத்தையா வீசி கடாசுவது. அவர் கரங்கள் சேவலை முன்னிறுத்தி, மயில் மேல் பட்டும் படாமலும் சாய்ந்த முருகன்படம் நோக்கி போகின்றன. பொன்னம்பலம் தடுமாறுகிறார். அரசுக்கு எதிராக, நண்பர்களின் ஆலோசனைகளையும் மீறி நீதி மன்றத்துக்குப் போகும் வழியில், ராமலிங்க அருளாளரால் பாடப்பட்ட சென்னை கந்த கோட்டத்திற்குப் போய் உள்ளே இருக்கும் திருக்குளத்தில் முதற்படியில் இறங்கி சேவல் கூவ வேண்டும் என்கிறார். உடனடியாய் கூவுகிறது. வெற்றிச் சங்காய் முழங்குகிறது. நீதிமன்றத்தில் வெற்றி. இந்த சிந்தனையில் இன்னொரு சிந்தனை கண்ணாடியில் முருக தரிசனம் கண்ட வள்ளலாரே, உருவ வழிபாட்டை உதறவில்லையா? பொன்னம்பலத்தின் இருகரமும் மீண்டும் நீள்கின்றன. நிமிடமாய் நீண்டவை வினாடியாய் சுருங்குகின்றன. மூளைக்கு, மனம் முட்டுக் கட்டை போடுகிறது.