பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


150 வீட்டுக் கணக்கும்... ஆகாயக் கணக்கும். விளக்குகள், ஜன்னல் கதவுகளால் சிறையிடப்பட்டன. மின்மினிப் பூச்சிகள் மட்டும், ஒளிப் பொட்டுக்களாய் வலம் வந்தன. நுழைவாசலில் நிற்கும் காவற்படையின் ஒரு காவலருடன், ஜீப்பின் மங்கிய வெளிச்சத்தில், விருந்தினர் விடுதிக்குப் போனவர், தற்செயலாய் ஆகாயத்தைப் பார்த்தார். பார்த்தவர் பார்த்தவர்தான். தோள் கண்டார் தோளே கண்டார் நிலைமைதான். மூன்று நிமிட இடைவெளிக்குப் பிறகு விழியாடாமல் நிலைத்த கண்களை பக்கவாட்டில் படர விட்டார். 'எம்மாடி' என்று தனக்குத்தானே சொல்லியபடி நின்ற இடத்தில் நின்றபடியே சுற்றிச் சுற்றி வந்தார். பூமிக் கோளத்தைப்போல், தன்னைத்தானே சுற்றினார். கால்களே அச்சாக, குதிகாலில் நின்றும், கால்களை நிமிர்த்தியும் வளைத்தும் ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்தார். கால் சுற்றும், கண் சுற்றும் ஒருமுகப்பட்டன. தலைமுகட்டின் பள்ளத்தாக்கான வாய் அகலப்பட்டது. இரண்டு கரங்களும் தலைக்கு மேல் போயின. பொன்னம்பலம் ஆகாயத்தை சல்லடையாக்கிய நட்சத்திரங்களை கண்கள் சல்லடையாகும்படி பார்த்தார். பிரமை கலையவில்லை. சுயம் திரும்பவில்லை. ஆகாயம் முழுவதும் அப்பி நிற்கும் விண்மீன்கள். கண்களின் கொள்ளளவிற்கு அடங்காதவை. அளப்பரியவை. அனந்தங்கோடி நெருப்புச் சூரியன்கள். எல்லையற்ற விசும்பில், கண்முட்டும் பகுதிவரை பாகம் பிரித்த பங்காளிக் கற்கள். இடையிடையே உள்ள ஆகாய வெளியையே விழியாய் கொண்ட விஸ்வ துண்டங்கள். பிற பகுதிகளில் மின்மினிப் பூச்சிகளாய் தோன்றும் அத்தனை நட்சத்திரங்களும், அந்த ஆகாய பரப்பில் கோபுர கலசங்களாய் மின்னுகின்றன. நிலவிற்கு நிற்க இடம் கொடுக்காத ஒளி உருளைகள். அத்தனையும் கூப்பிடு தொலைவில் ஒரு பாறையிலோ அல்லது மரத்திலோ ஏறினால் பிடித்து விடலாம் அல்லது பிடிபட்டு விடலாம்